உள்ளூர் செய்திகள்

காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயமானதால் வாலிபர் தற்கொலை

Update: 2022-08-18 08:32 GMT
  • அனீஸ் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
  • முதல் கட்ட விசாரணையில் அனீஸ் அஞ்சுகிராமம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டார், கண்ணாக்குடி தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி உஷா. இவர்களது மகன் அனீஸ் (வயது 25) எலக்ட்ரீசியன்.

மணி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து உஷாவும் அனீசும் பழைய வீட்டில் இருந்து மாறி நாகர்கோவில் டி.வி.டி. காலனி பகுதியில் வசித்து வருகிறார்கள்.

நேற்று அனீஸ் தனது நண்பருடன் வெளியே செல்வதாக தாயார் உஷாவிடம் கூறிவிட்டு சென்றார். இரவு வீட்டிற்கு வரவில்லை. இன்று காலை வரை அவர் வீட்டுக்கு வராததால் தயார் உஷா அனீசை தேடினார்.

கண்ணாக்குடி தெருவில் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்தபோது அனீஸ் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து தாயார் உஷா கதறி அழுதார்.

இதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். பின்னர் கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

தூக்கில் பிணமாக தொங்கிய அனீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அனீஸ் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் அனீஸ் அஞ்சுகிராமம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

பின்னர் இவர்களுக்கு இடையே சில நாட்களாக தொடர்பு இல்லாமல் இருந்து வந்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு அனீஸ் காதலியை சந்தித்துள்ளார். அப்போது அவர் தனக்கு வேறு இடத்தில் திருமண நிச்சயமான தகவலை அனீசிடம் கூறியுள்ளார். திருமண நிச்சயமான போட்டோவை அனீசுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அனீஸ் மனமுடைந்து காணப்பட்டார்.

நேற்று தனது நண்பர்களிடம் இது தொடர்பாக கூறி கண் கலங்கியுள்ளார். நண்பர்கள் அவரை சமாதானம் செய்துள்ளனர். இந்தநிலையில் நண்பர்களுடன் நேற்று இரவு அவர்களது பழைய வீட்டில் தங்கி உள்ளார். நண்பர்கள் இன்று காலையில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளனர். வீட்டில் தனியாக இருந்த அனீஸ் அதன்பிறகு தூக்கில் தொங்கியது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News