உள்ளூர் செய்திகள்

என்.எல்.சி.,க்கு நில அளவீடு செய்ய எதிர்ப்பு- அதிகாரிகளை தடுக்க மறியல் செய்த கிராம மக்கள்

Published On 2022-12-06 12:00 GMT   |   Update On 2022-12-06 12:00 GMT
  • கடந்த சில தினங்களுக்கு முன்பு கரிவெட்டி கிராமத்திற்கு வந்த நிலத்தை அளவீடு செய்ய அதிகாரிகள் காரில் வந்தனர்.
  • எங்கள் கிராமத்தை விட்டு வெளியேறுங்கள் என்று கூறினர்.

சேத்தியாத்தோப்பு:

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனம் அப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களை கையகப்படுத்தி நிலக்கரியை எடுத்து மின் உற்பத்தி செய்து வழங்கி வருகிறது.

அதன்படி என்.எல்.சி., இரண்டாவது சுரங்கம் விரிவாக்கத்திற்காக சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கரிவெட்டி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 150 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த என்.எல்.சி., நிறுவனம் பல மாதங்களாக முயற்சி செய்து வருகிறது. இதற்கு அங்கு வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கரிவெட்டி கிராமத்திற்கு வந்த நிலத்தை அளவீடு செய்ய அதிகாரிகள் காரில் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய அக்கிராம மக்கள் அதிகாரிகளிடம் கூறுகையில், எங்கள் ஊரில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் ஒரு குடும்பத்திற்கு அதாவது ஒரு ரேஷன் அட்டைக்கு ஒரு நபருக்கு என்.எல்.சி.,-யில் நிரந்தர வேலை வழங்க வேண்டும். அனைத்து குடும்பத்திற்கும் மாற்று இடம் 10-சென்ட் வழங்க வேண்டும். ஒரு ஏக்கர் விவசாய நிலத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை ஒப்புக் கொண்டால் நீங்கள் நிலத்தை அளவீடு செய்யலாம். இல்லையென்றால் எங்கள் கிராமத்தை விட்டு வெளியேறுங்கள் என்று கூறினர்.

இதற்கு என்.எல்.சி., அதிகாரிகள் ஏக்கர் 1-க்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும், வேலை தரமுடியாது என்றும் வேண்டுமானால் அதற்கு பதில் மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் வழங்குவதாகவும், மாற்று இடம் தர வாய்ப்பில்லை என்றும் கூறிவருகின்றனர். இதனை ஏற்க மறுத்து வரும் கரிவெட்டி கிராம மக்கள் அதிகாரிகளை அளவீடு செய்ய விடாமல் தடுத்தனர். இதனால் அதிகாரிகள் திரும்ப சென்றனர்.

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு கரிவெட்டி கிராமத்திற்கு நிலத்தை அளவீடு செய்ய அதிகாரிகள் வருவதாக அக்கிராம மக்களுக்கு தகவல் வந்தது. இம்முறை ஊருக்குள்ளே அதிகாரிகளை விடக்கூடாது. அதிகாரிகளை ஊரின் எல்லையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஊர் பிரமுகர்கள் திட்டமிட்டனர்.

அதன்படி கரிவெட்டி கிராம எல்லையில் திரண்ட கரிவெட்டி கிராம மக்கள் பா.ம.க., கொடிகளுடன் சாலையில் அமர்ந்து மறியல் செய்து வருகின்றனர்.

Similar News