உள்ளூர் செய்திகள்

எடப்பாடி பழனிசாமி உருவபடம் எரிப்பு விவகாரம்- சஸ்பெண்டு செய்யப்பட்ட பா.ஜனதா நிர்வாகி மீண்டும் கட்சியில் சேர்ப்பு

Published On 2023-03-16 10:42 IST   |   Update On 2023-03-16 10:42:00 IST
  • மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடியை 6 மாதங்கள் சஸ்பெண்டு செய்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் வெங்கடேசன் நேற்று இரவு உத்தரவிட்டார்.
  • சஸ்பெண்டு செய்யப்பட்ட தினேஷ் ரோடியை, பா.ஜனதா கட்சி மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி மீண்டும் கட்சியில் சேர்த்து இன்று காலை உத்தரவிட்டார்.

தூத்துக்குடி:

பா.ஜனதா கட்சியின் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவராக இருந்த நிர்மல்குமார், மாநில செயலாளராக இருந்த தீலிப்கண்ணன் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயளலாரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

இதனால் அ.தி.மு.க.- பா.ஜனதா நிர்வாகிகள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் கூட்டணி தர்மத்தை மீறி பா.ஜனதா நிர்வாகிகளை அ.தி.மு.க.வில் இணைப்பதாக கூறி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம் மணியாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி தலைமையிலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அ.தி.மு.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடியை 6 மாதங்கள் 'சஸ்பெண்டு' செய்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் வெங்கடேசன் நேற்று இரவு உத்தரவிட்டார்.

இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில், பா.ஜனதா கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதாலும், கட்சியின் நிலைப்பாட்டை மீறி தன்னிச்சையாக செயல்பட்டதாலும் இளைஞரணி மாவட்ட தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தினேஷ் ரோடி 6 மாதங்கள் 'சஸ்பெண்டு' செய்யப்படுகிறார் என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் 'சஸ்பெண்டு'செய்யப்பட்ட தினேஷ் ரோடியை, பா.ஜனதா கட்சி மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி மீண்டும் கட்சியில் சேர்த்து இன்று காலை உத்தரவிட்டார். மாவட்ட தலைவர் நேற்று இரவு 'சஸ்பெண்டு' செய்த நிலையில் இளைஞரணி மாவட்ட தலைவர் தினேஷ் ரோடியை மாநில பொதுச்செயலாளர் பொன்பாலகணபதி இன்று மீண்டும் கட்சியில் சேர்த்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News