உள்ளூர் செய்திகள்

சிறுமுகை: முன்விரோதத்தில் டாஸ்மாக் பார் ஊழியரை கொன்ற உறவினர்

Published On 2022-08-15 05:37 GMT   |   Update On 2022-08-15 05:37 GMT
  • சிறுமுகை அடுத்த வெள்ளிக்குப்பம் பாளையத்தில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது.
  • தனிப்படையினர் குழுவாக பிரிந்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

கோவை:

கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்த வெள்ளிக்குப்பம் பாளையத்தில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. அதன் அருகே பார் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

இந்த பாரில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கண்டணப்பட்டியை சேர்ந்த காளையப்பன்(வயது27) என்பவர் காசாளராக கடந்த 3 மாதங்களாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று காளையப்பன் பாரில் சாப்பிடுவதற்காக காலை உணவு தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது பாருக்கு 5 பேர் கும்பல் ஒன்று வந்தது. அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து காளையப்பனை சரமாரியாக வெட்டினர். இதில் அவருக்கு 16 இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனால் காளையப்பன் சம்பவ இடத்திலேேய ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு சக ஊழியர்கள் ஓடி வந்து பார்த்த போது பிணமாக கிடந்தார். இதுகுறித்து அவர்கள் சிறுமுகை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும் பார் ஊழியரை வெட்டியவர்களை பிடிக்க மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி. பாலாஜி தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் குழுவாக பிரிந்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். முதலில் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம், காளையப்பன் பற்றியும், அவரது உறவினர்கள் குறித்தும் விசாரணை நடத்தினர். மேலும் பார் மற்றும் அந்த பகுதியில் உள்ள மற்ற கடைகளின் கண்காணிப்பு கேமிராக்களையும் ஆய்வு செய்தனர்.

அப்போது பாரில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் 6 பேர் கும்பல் ஒன்று கைகளில் அரிவாளுடன் நுழைகின்றனர். பின்னர் அவர்கள் காளையப்பனை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு, மீண்டும் அங்கிருந்து வேகமாக தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளை கைப்பற்றி அதில் பதிவாகி இருந்த உருவங்களை கொண்டு கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் காளையப்பனை கொலை செய்ததாக, அவரது உறவினரான சிவகங்கையை சேர்ந்த ராஜகண்ணப்பன்(39) என்பவர் போலீசாரிடம் சிக்கினார். அவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் போலீசாரிடம் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

ராஜகண்ணப்பணும், காளையப்பனும் உறவினர்கள். இதில் ராஜகண்ணப்பன் திருப்பூரில் தங்கி 11 டாஸ்மாக் பார்களை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார். அதில் தாராபுரத்தில் உள்ள டாஸ்மாக் பாரை காளையப்பன் வாடகைக்கு எடுத்து நடத்தினார். வியாபாரமும் நன்றாக சென்றுள்ளது. ராஜகண்ணப்பன் கேட்ட வாடகையையும் அவர் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் கொரோனா காலகட்டம் வந்தபோது, வியாபாரம் சற்று குறைந்ததால் டாஸ்மாக் பாருக்கான வாடகையை குறைக்குமாறு காளையப்பன், ராஜகண்ணப்பணிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இதையடுத்து காளையப்பன் கடையை விட்டு மீண்டும் சொந்த ஊருக்கே சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊரில் ஜல்லிக்கட்டு திருவிழா நடந்தது. திருவிழாவுக்கு ராஜகண்ணப்பனும் வந்திருந்தார். அப்போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு உருவானது.

இதனால் ஆத்திரம் அடைந்த காளையப்பன் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்துள்ளார். இந்த தகவல் ராஜகண்ணப்பனுக்கு தெரிந்து விட்டது.

தன்னை தீர்த்து கட்ட முடிவு செய்த காளையப்பனை நாம் முந்தி கொண்டு, தீர்த்து கட்ட வேண்டும் என முடிவு செய்த அவர், கூலிக்கு ஆட்களை அழைத்து கொண்டு, சம்பவத்தன்று 2 மோட்டார் சைக்கிளில் சிறுமுகைக்கு வந்து காளையப்பனை வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து அவருடன் வந்த மற்ற நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

Similar News