உள்ளூர் செய்திகள்

மரம் விழுந்து வங்கி அதிகாரி பலியானதற்கு அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்- பா.ஜனதா துணை தலைவர் நாராயணன் அறிக்கை

Published On 2022-06-28 08:19 GMT   |   Update On 2022-06-28 08:19 GMT
  • சாலையில் நடைபெறும் மழை நீர் வடிகால் பணிகளே இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
  • கடந்த 15 நாட்களாக எந்த முன்னேற்றமும் இல்லை.

சென்னை:

பா.ஜனதா மாநில துணைத்தலைவர் தி.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 24-ந் தேதி சென்னை கே.கே.நகரில் ஒரு காரின் மீது மரம் விழுந்து வங்கி பெண் அதிகாரி ஒருவர் இறந்தது அதிர்ச்சியளிக்கிறது, அந்த சாலையில் நடைபெறும் மழை நீர் வடிகால் பணிகளே இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே அந்த சாலையில் கடந்த வாரத்தில் மட்டும் இரு மரங்கள் விழுந்த நிலையிலும் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதே போல் மூன்று வாரங்களுக்கு முன்அடையார் கஸ்தூரிபாய் நகரில் மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்டிருந்த குழியில் ஒரு கார் விழுந்து சிறு காயங்களுடன் இருவர் உயிர் பிழைத்தது குறிப்பிடத்தக்கது.

அடையார், நேரு நகர் முதல் தெருவில், மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளம், எந்த விதமான பாதுகாப்பு விதிகளும் பின்பற்றப்படாமல் அலட்சியமாக தோண்டப்பட்டுள்ளது.

இந்த பணியில் கடந்த 15 நாட்களாக எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த பள்ளம் சுமார் 40 முதல் 50 அடி நீளம் கொண்டதாக உள்ளது. பொது மக்களுக்கு கடும் ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.

சென்னை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு இல்லாமல், உரிய நேரத்தில் முடிக்காமல், ஆபத்தை விளைவிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் பணிகளால் மக்களுக்கு ஏற்படும் பல்வேறு இழப்புகள், உயிரிழப்புகள் அனைத்திற்கும் தமிழக அரசு, மாநகராட்சி அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News