உள்ளூர் செய்திகள்

கிரைண்டர் கல்லை தலையில் போட்டு கணவனை கொன்ற மனைவி

Published On 2022-11-29 10:31 GMT   |   Update On 2022-11-29 10:31 GMT
  • கடந்த 7 வருடமாக எனது கணவரின் சித்ரவதைகளால் நரக வேதனை அனுபவித்து வந்தேன்.
  • போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.

குனியமுத்தூர்:

கோவை சுந்தராபுரம் அருகே பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் ரங்கன் (வயது 34). எலக்ட்ரீசியன். இவரது மனைவி கோகுல ஈஸ்வரி (31).

ரங்கனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். நேற்றுமுன்தினம் இரவும் இதேபோல் குடித்து விட்டு வந்து தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த கோகுல ஈஸ்வரி, ரங்கனின் தலையில் கிரைண்டர் கல்லை தூக்கிப் போட்டு அவரை கொலை செய்தார்.

இதுதொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுலஈஸ்வரியை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எங்களுக்கு திருமணம் ஆகி 7 வயதில் ஒரு குழந்தை உள்ளது. எனது கணவன் தினமும் மது குடித்து விட்டு வந்து என்னையும், எனது குழந்தையையும் தாக்கி கொடுமைப்படுத்தி வந்தார். காது கொடுத்து கேட்க முடியாத வகையில் தகாத வார்த்தைகள் பேசுவார்.

இதன் காரணமாக எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அவர் திருந்துவார் என்று எதிர்பார்த்தேன் . ஆனால் நாளுக்கு நாள் அவரது தொல்லை அதிகமாகிக் கொண்டுதான் போனது.

இதனால் நான் மிகுந்த மனவேதனையுடன் வாழ்ந்து வந்தேன். எனது கணவருடன் வாழ பிடிக்காமல் கடந்த ஜனவரி மாதம் விஷம் தின்று தற்கொலைக்கு முயன்றேன். ஆனாலும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று என்னை பிழைக்க வைத்து விட்டார்கள்.

நான் கடந்த 7 வருடமாக எனது கணவரின் சித்ரவதைகளால் நரக வேதனை அனுபவித்து வந்தேன். என்ன செய்வது என்பது தெரியாமல் தவித்து வந்தேன். போலீசில் புகார் செய்தால் கூட ,தண்டனை முடிந்து சிறிது நாளில் திருப்பி வெளியே வந்து விடுவார். மீண்டும் இதே நிலைதான் தொடரும் என்று நினைத்து மிகவும் கலங்கினேன்.

சம்பவத்தன்று இரவு வெளியே சென்ற எனது கணவர் குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் வீட்டிற்கு வந்தார். பின்னர் தகாத வார்த்தைகளால் பேசி என்னையும், எனது குழந்தையையும் தாக்கினார். அப்போது எங்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதமும் ஏற்பட்டது.

பின்னர் அவர் குடிபோதையில் நன்கு தூங்கி விட்டார். ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாத நான் எனது கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன்.

அதன்படி இரவு 11.30 மணி அளவில் கிரைண்டர் கல்லை எடுத்து எனது கணவரின் தலையில் தூக்கி போட்டேன். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் அலறினார். இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் வந்தனர்.

அவர்கள் உயிருக்கு போராடிய எனது கணவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்து விட்டனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு கோகுல ஈஸ்வரி போலீசாரிடம் வாக்குமூலத்தில் கூறி இருந்தார். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

கோகுலஈஸ்வரி, கணவரை கொலை செய்து விட்டோமே என்ற எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி இயல்பாக காணப்பட்டார். போலீசார் கேட்ட கேள்விகளுக்கும் எந்தவித குழப்பமும் இன்றி தெளிவாக பதில் அளித்தார். இது போலீசாருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News