உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர் ஒன்றியத்தில் மர்ம காய்ச்சல் பரவுவதால் 20-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Published On 2023-02-04 06:03 GMT   |   Update On 2023-02-04 06:03 GMT
  • குழந்தை உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.
  • காய்ச்சல் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

பொன்னேரி:

மீஞ்சூர் ஒன்றியம் வண்ணிப்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட 5 வது வார்டு மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு வாரமாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. பொது மக்கள் மீஞ்சூர், பொன்னேரி, அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தொடர்ந்து குழந்தை உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.

இதையடுத்து மீஞ்சூர் வட்டார மருத்துவமனையின் நடமாடும் மருத்துவக் குழு பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று முகாமிட்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து மாத்திரை மற்றும் பரிசோதனை செய்தனர்.

துப்புரவு பணியாளர் குப்பைகளை அகற்றி தெருக்களில் பிளீச்சிங் பவுடர், கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன. மீஞ்சூர் ஒன்றிய கொசு ஒழிப்பு பணியாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் வீடு வீடாக சென்று வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்து, டயர், தேங்காய் சிரட்டை, பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர், இதனைத் தொடர்ந்து குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஆழ்துளை கிணற்று நீர், பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. காய்ச்சல் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் காய்ச்சல் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Similar News