உள்ளூர் செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 87 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

Update: 2022-08-14 04:11 GMT
  • நீர்வரத்து அதிகரிப்பால் வருவாய்த்துறையினர், போலீசார் காவிரி கரையோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

பென்னாகரம்:

கர்நாடகா, கேரளா மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் கர்நாடக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த இரு அணைகளில் இருந்து 87 ஆயிரத்து 131 கனஅடி உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

இன்றுகாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 87 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 36-வது நாளாக தடை விதித்துள்ளது.

இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க அனுமதி இல்லை என்றனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

நீர்வரத்து அதிகரிப்பால் வருவாய்த்துறையினர், போலீசார் காவிரி கரையோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News