உள்ளூர் செய்திகள்

அண்ணாசிலை உடைப்புக்கு கண்டனம்- கண்டமங்கலத்தில் வியாபாரிகள் கடைகள் அடைப்பு

Published On 2022-09-30 05:09 GMT   |   Update On 2022-09-30 05:09 GMT
  • விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தில் புதுவை-விழுப்புரம் சாலையில் அண்ணாசிலை உள்ளது.
  • கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

கண்டமங்கலம்:

விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தில் புதுவை-விழுப்புரம் சாலையில் அண்ணாசிலை உள்ளது. இந்த சிலையை மர்ம நபர்கள் உடைத்து, அவமதித்துள்ளனர். அதோடு தி.மு.க. கொடியை இறக்கி அண்ணாசிலை முகத்தை மூடி நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா உருவபடத்தை தொங்க விட்டு சென்றனர்.

இதனை அறிந்த தி.மு.க. வினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், கம்யூனிஸ்டு கட்சியினர் ஒன்று திரண்டனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அண்ணாசிலையை அவமதித்தவர்களை கைது செய்யவேண்டும் என்று கோஷமிட்டனர். தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசார் விரைந்து சென்று மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது பற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

அதன்பேரில் மறியல் கைவிடப்பட்டது. இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடிவருகிறார்கள். எனினும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கண்டமங்கலத்தில் அனைத்து வியாபாரிகள் மற்றும் அனைத்து அமைப்பினர் இன்று (30-ந் தேதி) ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று கண்டமங்கலத்தில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. கண்டமங்கலம் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியானது. கண்டமங்கலத்தில் கடையடைப்பு போராட்டம் காரணமாக சினிமா காட்சிகள் இன்று ரத்து செய்யப்பட்டது.

Similar News