உள்ளூர் செய்திகள்

குரோம்பேட்டை ராதாநகர் சுரங்கப்பாதை பணிகள் 3 மாதத்தில் முடிவடைகிறது: முதலமைச்சர் நேரில் சென்று திறந்து வைக்கிறார்

Published On 2022-08-18 11:11 GMT   |   Update On 2022-08-18 11:11 GMT
  • 3 மாதங்களில் பணிகளை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், சுரங்கப் பாதை பணிகள் 3 மாதத்தில் நிறைவடையும் என்றும் முதலமைச்சர் நேரில் வந்து திறந்து வைக்க உள்ளார் கருணாநிதி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
  • 4 சக்கர கார், சிறிய வேன்கள் சென்று வரும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருவதால் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினமும் கடக்க முடியும் என்றார்.

சென்னை:

குரோம்பேட்டை ராதா நகர் ரெயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் திட்டம் 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி இந்த சுரங்கப் பாதைக்கு அடிக்கல் நாட்டினார்.

ரெயில்வே தண்டவாளங்களுக்கு அடியில் சுரங்கம் தோண்டி முடிக்கப்பட்ட நிலையில் மெயின்ரோட்டில் பணிகள் தொடங்கும் தருவாயில் 2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்த போது இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இதன் பிறகு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்கள். சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி இது தொடர்பாக சட்டசபையில் பலமுறை கேள்வி எழுப்பி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதன்பிறகும் பணிகள் தொடங்கப்படாததால் அப்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

நீதிமன்றம் உடனடியாக சுரங்கப் பாதை பணிகள் தொடங்க உத்தரவு விட்டதால் 2020-ம் அண்டு முன்னாள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனாலும் சுரங்கப்பாதை பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வந்தது.

தற்போது தி.மு.க. ஆட்சியில் இந்த பணிகளை விரைந்து முடிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளதால் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது.

அங்கு நடைபெற்று வரும் பணிகளை தொகுதி எம்.எல்.ஏ.வான இ.கருணாநிதி நேரில் சென்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், 3 மாதங்களில் பணிகளை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், சுரங்கப் பாதை பணிகள் 3 மாதத்தில் நிறைவடையும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து இதை திறந்து வைக்க உள்ளார் என்றும் தெரிவித்தார்.

4 சக்கர கார், சிறிய வேன்கள் சென்று வரும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருவதால் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினமும் கடக்க முடியும் என்றார்.

அப்போது மண்டலக் குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News