உள்ளூர் செய்திகள்

சென்னை தியாகராயநகரில் வாகன நிறுத்த கட்டணம் உயர்வு- மாநகராட்சி கூட்டத்தில் முடிவு

Published On 2022-06-28 10:10 GMT   |   Update On 2022-06-28 10:10 GMT
  • முதல் பெண் மேயராக பிரியா பதவியேற்ற பிறகு அவர் தலைமையில் நடந்த 3-வது மாமன்ற கூட்டம் இதுவாகும்.
  • கொருக்குப்பேட்டை போஜராஜன் நகரில் ரெயில்வே கேட் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சென்னை:

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் இன்று நடந்தது. மேயர் பிரியா தலைமை தாங்கினார். துணை மேயர் மகேஸ்குமார், கமிஷனர் (பொறுப்பு) பிரசாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்றனர்.

முதல் பெண் மேயராக பிரியா பதவியேற்ற பிறகு அவர் தலைமையில் நடந்த 3-வது மாமன்ற கூட்டம் இதுவாகும்.

இந்த கூட்டத்தில் தி.நகரில் வாகன நிறுத்த கட்டணத்தை உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது. தற்போது தி.நகரில் பிரீமியம் பார்க்கிங் கட்டணமாக ஒரு மணி நேரத்துக்கு காருக்கு ரூ.40-ம், மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.10-ம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்படி கார்களுக்கான கட்டணம் ரூ.20 உயர்த்தப்பட்டு உள்ளது. இதில் கார் பார்க்கிங் கட்டணம் ஒரு மணி நேரத்துக்கு ரூ.60 ஆக வசூலிக்கப்படும். மோட்டார் சைக்கிள்களுக்கு கட்டணம் ரூ.5 உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கான தீர்மானம் இன்றைய மாநகராட்சி கூட்டத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

சென்னையை பொறுத்த வரை 83 இடங்களில் வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இடங்களில் 12 ஆயிரம் வாகனங்களை நிறுத்தலாம். தி.நகர் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் கார்களுக்கான கட்டணம் ரூ.20 ஆகவும், மோட்டார் சைக்கிள்களுக்கான கட்டணம் ரூ.5 ஆகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கொருக்குப்பேட்டை போஜராஜன் நகரில் ரெயில்வே கேட் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க ரூ.13 கோடியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தி.நகரில் மட்டும் வாகன நிறுத்த கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது ஏன்? என்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பல அடுக்கு வாகன நிறுத்தும் இடமாக பார்க்கிங் பகுதி வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது.இதற்கான பராமரிப்பு செலவினம் அதிகமாக இருப்பதால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

சென்னை மாநகராட்சி முதல் கூட்டம் ஏப்ரல் மாதம் நடந்தது. அப்போது மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

மாநகராட்சி மேற்கொள்ளும் பணிகளுக்கு கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும்.

ஏற்கனவே அனைத்து மண்டல குழுக்களுக்கும் மேயர் அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில், 'ஒவ்வொரு மாதமும் 10-ந்தேதிக்குள் மண்டல கூட்டங்களை நடத்தி முடித்து தீர்மானங்களை மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

மண்டல குழுக்களில் முன் வைக்கப்படும் தீர்மானங்களின் அடிப்படையிலேயே பணிகள் தேர்வு செய்யப்பட்டு மாமன்ற கூட்டத்தில் தீர்மானங்கள் கொண்டு வரப்படுவது குறிப்பிடத்தக்கது.

மாநகராட்சி கூட்டத்தில் 81-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் சாந்தகுமார், சென்னையில் குப்பைகள் சேகரிப்பது பற்றி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, சென்னையில் ஓராண்டில் ஒரு லட்சத்து 54 ஆயிரம் மெட்ரிக் டன் மக்கும் குப்பைகளும், 75 ஆயிரம் மெட்ரிக் டன் மக்காத குப்பைகளும் சேரிக்கப்படுகிறது. இதில் மக்கும் குப்பைகளில் இருந்து 3 ஆயிரம் டன் உரம் தயாரிக்கப்படுகிறது.

அதில் 2 ஆயிரம் டன் உரம் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. 1000 டன் மாநகராட்சி பூங்காங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்றார்.

கொரோனா காரணமாக இன்றைய கூட்டத்தில் நேரமில்லா நேரம் ரத்து செய்யப்பட்டு இருந்தது. இதற்கு மண்டல தலைவர் தனசேகரன் எதிர்ப்பு தெரிவித்தார். 200 வார்டுகளிலும் உள்ள பிரச்சினைகளை நேரமில்லா நேரத்தில்தான் எழுப்ப முடியும். எனவே அதை ரத்து செய்யாமல் கூட்டத்தை நாள் முழுவதும் நடத்தி இருக்கலாம் என்றார்.

இதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, கொரோனா காரணமாகவே நேரமில்லா நேரம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அடுத்த கூட்டத்தில் அது சேர்க்கப்படும் என்றார்.

Tags:    

Similar News