உள்ளூர் செய்திகள்

போடி அருகே வேலியில் சிக்கிய மாட்டை அடித்து கொன்ற புலி- மர்மமாக இறந்த சிறுத்தை

Published On 2022-09-30 05:59 GMT   |   Update On 2022-09-30 05:59 GMT
  • குரங்கணியில் இருந்து வடக்குமலைக்கு செல்லும் பகுதியில் இன்று காலை ஒரு தோட்டத்தில் காட்டு மாடு கன்றுக் குட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
  • வனத்துறை ஊழியர்களே சிறுத்தையை தாக்கி இருக்கலாம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி, பீச்சாங்கரை பகுதியில் சிறுத்தை, காட்டு மாடு, செந்நாய், மான் உள்ளிட்ட உயிரினங்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன. அதே போன்று இப்பகுதியில் மா, இலவம் பஞ்சு விவசாயம் நடைபெற்று வருகிறது.

வன விலங்குகள் அதிக அளவு நடமாடிக் கூடிய இப்பகுதியில் தோட்ட உரிமையாளர்கள் 6 முதல் 10 அடி உயரத்துக்கு இரும்பு வேலி அமைத்து உள்ளனர். இதனால் அவ்வப்போது வேலியில் சிக்கி வன உயிரினங்கள் இறந்து விடுவதும், அதனை யாருக்கும் தெரியாமல் புதைத்து விடுவதும் நடக்கிறது. மேலும் வேலிகளை பார்க்கும் விலங்குகள் அதில் இருந்து தப்பிக்க வேறு திசையில் சென்று குடியிருப்பு பகுதிக்குள்ளும் புகுந்து விடுகிறது.

குரங்கணியில் இருந்து வடக்குமலைக்கு செல்லும் பகுதியில் இன்று காலை ஒரு தோட்டத்தில் காட்டு மாடு கன்றுக் குட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதை பார்த்த அப்பகுதியினர் இந்த கன்றுக்குட்டியை புலி அல்லது செந்நாய் தாக்கி கொன்றிருக்கலாம் என்று தெரிவித்தனர்.

இப்பகுதியில் தோட்டங்களுக்கு வேலி அமைக்க கூடாது என்று வனத்துறை கட்டுப்பாடுகள் விதித்திருந்தாலும் அதனையும் மீறி பலர் வேலி அமைத்துள்ளனர். இதனால் வனப்பகுதியை ஒட்டி உலா வரும் விலங்குகள் வேலியில் சிக்கிக் கொள்கின்றன. அந்த நேரத்தில் மற்ற விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்து விடுகின்றன.

புலி நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் காட்டு மாடை புலி கொன்றிருக்கலாம் என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஏற்கனவே நேற்று தேனி அருகே சிறுத்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தது சமூக ஆர்வலர்கள் இடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. தேனி வனக்கோட்ட பகுதியான கோம்பை வனப்பகுதியில் சிறுத்தை வேலியில் சிக்கி கிடப்பதாக வனப்பாதுகாவலர் மகேந்திரனுக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்றனர்.

அப்போது சோலார் கம்பி வேலியில் இருந்து வெளியே வர முடியாமல் சிறுத்தை தவித்தது. மகேந்திரன் அதனை மீட்க முயன்ற போது மகேந்திரனின் கையை கடித்து விட்டு அது தப்பி ஓடியது.

இதனையடுத்து மகேந்திரன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அதே சிறுத்தை நேற்று மீண்டும் மின் வேலியில் சிக்கி உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்து அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்து அதே இடத்தில் அடக்கம் செய்தனர். அதிகாரியை தாக்கிய சிறுத்தை மறு நாள் அதே பகுதியில் உயிரிழந்து கிடந்தது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறை ஊழியர்களே சிறுத்தையை தாக்கி இருக்கலாம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே சிறுத்தையின் இறப்பில் உள்ள மர்மத்தை தேனி வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News