உள்ளூர் செய்திகள்

பெரம்பூரில் நகைக்கடையில் கொள்ளை முயற்சி- ஷட்டரை உடைக்க முடியாததால் பல லட்சம் நகை தப்பியது

Update: 2022-09-25 11:21 GMT
  • நகைக்கடை ஷட்டரை உடைக்க முயன்று முடியாததால் தப்பிச் செல்வது பதிவாகி உள்ளது.
  • கடை அருகே கொள்ளையர்கள் ஷட்டரை உடைக்க பயன்படுத்திய கடப்பாரை கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்.

பெரம்பூர்:

பெரம்பூர் பட்டேல் சாலையில் நகைக்கடை நடத்தி வருபவர் தீனதயாளன். இவர் நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

இன்று அதிகாலை 3 மணி அளவில் 2 மர்ம நபர்கள் கடப்பாரை, சுத்தியலுடன் வந்து நகைக்கடையின் ஷட்டரை உடைக்க முயன்றனர். ஷட்டரை உடைக்க முடியாததால் அவர்கள் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்தனர். பின்னர் அந்த கேமராவையும் திருடி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை அவ்வழியே சென்றவர்கள், நகைக்கடையின் ஷட்டரை கொள்ளையர்கள் உடைக்க முயற்சி செய்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கடையின் உரிமையாளர் மற்றும் செம்பியம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கடை அருகே கொள்ளையர்கள் ஷட்டரை உடைக்க பயன்படுத்திய கடப்பாரை கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்.

நகைக்கடையின் உள்ளே இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தபோது அதில், கடப்பாரையுடன் 2 வாலிபர்கள் வருகிறார்கள். அவர்களில் ஒருவன் தலையில் ஹெல்மெட் அணிந்து இருந்தான். இருவரும் நகைக்கடை ஷட்டரை உடைக்க முயன்று முடியாததால் தப்பிச் செல்வது பதிவாகி உள்ளது.

கொள்ளையரின் முயற்சி தோல்வியில் முடிந்ததால் நகைக்கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் தப்பின. கண்காணிப்பு கேமரா காட்சி பதிவை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News