உள்ளூர் செய்திகள்
பாளை சிறை கைதிகள் பெட்ரோல் பங்க்கில் நடந்த மருத்துவ முகாமில் சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி பரிசோதனை செய்த காட்சி.

சிறைக்குள் சாதி மோதல்களை தடுக்க கூடுதல் சி.சி.டி.வி. பொருத்தப்படும்- நெல்லையில் சிறைத்துறை டி.ஐ.ஜி. பேட்டி

Published On 2022-10-01 11:11 GMT   |   Update On 2022-10-01 11:11 GMT
  • ஆயுள் தண்டனை கைதிகள் 63 பேரை சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்வதற்கு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.
  • முதல் கட்டமாக அரசின் அனுமதிப்படி பாளை மத்திய சிறையில் இருந்து நேற்று 8 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை:

தமிழக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி இன்று பாளை மத்திய சிறையில் திடீர் ஆய்வை மேற்கொண்டார். அப்போது அவர் சிறை அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் கோப்புகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து சிறை கைதிகளிடம் அங்குள்ள வசதிகள், உணவின் தரம் உள்ளிட்டவைகளை கேட்டறிந்தார்.

முன்னதாக திருவனந்தபுரம் சாலையில் சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்குக்கு சென்ற அவர் அங்கு 5 கிலோ கியாஸ் சிலிண்டர் விற்பனையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் தனது உடல்நிலையை பரிசோதித்து கொண்டார். அதன்பின்னர் முகாமிற்கு வந்த பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி, பிளாஸ்டிக், பாலித்தீன் பயன்பாட்டை தவிக்குமாறு அறிவுறுத்தினார். அங்கு நடந்த முகாமில் இலவச உடல் பரிசோதனை, கண் பரிசோதனைகளில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பெட்ரோல் போட வந்த வாகன ஓட்டிகள் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர்.

தமிழகம் முழுவதும் சிறைத்துறை மூலமாக 5 பெட்ரோல் நிலையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாளை மத்திய சிறை சார்பில் நன்னடத்தை கைதிகளை கொண்டு இயக்கப்பட்டு வரும் பெட்ரோல் பங்க் இதுவரை ரூ.5  கோடி லாபம் ஈட்டி உள்ளது.

மதுரை உள்பட மேலும் 5 இடங்களில் பெட்ரோல் நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மதுரையில் புதிய சிறைச்சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடு தடுக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிறை சாலைக்குள் சாதி ரீதியிலான மோதல்களை தவிர்ப்பதற்காக தனித்தனி அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் சி.சி.டி.வி. கண்காணிப்பு இருந்தாலும் அந்த கண்காணிப்புகளை மேலும் பலப்படுத்தும் விதமாக கூடுதல் சி.சி.டி.வி. கேமிராக்கள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரை ஆயுள் தண்டனை கைதிகள் 63 பேரை சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்வதற்கு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். முதல் கட்டமாக அரசின் அனுமதிப்படி பாளை மத்திய சிறையில் இருந்து நேற்று 8 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து அரசு அறிவிக்கும்பட்சத்தில் படிப்படியாக மீதம் உள்ளவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, பாளை மத்திய சிறை சூப்பிரண்டு சங்கர் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News