உள்ளூர் செய்திகள்

குமரியில் கடந்த ஒரு மாதத்தில் 874 பேருக்கு கொரோனா- புதிதாக 99 பேர் பாதிப்பு

Published On 2022-07-02 05:25 GMT   |   Update On 2022-07-02 05:25 GMT
  • குமரி மாவட்டத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 80 ஆயிரத்து 805 ஆக உயர்ந்துள்ளது. இதில் கடந்த 3-ந்தேதி முதல் இன்று வரை 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் இன்று வரை பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 288 ஆக அதிகரித்துள்ளது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் மே மாதத்தில் கொரோனா தினசரி பாதிப்பு பூஜ்ஜியத்தில் இருந்து வந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் சிலர் மட்டுமே பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக மேற்கு மாவட்ட பகுதிகளான முஞ்சிறை, மேல்புறம் ஒன்றியங்களில் ஏராளமானோர் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதைத் தொடர்ந்து மற்ற இடங்களிலும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.

மாவட்டம் முழுவதும் நேற்று 838 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 99 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டதில் 55 பேர் ஆண்கள், 44 பேர் பெண்கள் ஆவார்கள். இதில் 8 குழந்தைகளும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

நாகர்கோவில் மாநகரப் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 19 ஆக அதிகரித்துள்ளது. முஞ்சிறை ஒன்றியத்தில் 15 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தோவாளை, திருவட்டார் ஒன்றியங்களில் தலா 11 பேரும், தக்கலையில் 10 பேரும், ராஜாக்கமங்கலம், குருந்தன்கோட்டில் தலா 7 பேரும், அகஸ்தீஸ்வரத்தில் 9 பேரும், கிள்ளியூரில் 8 பேரும், மேல்புறத்தில் 9 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

குமரி மாவட்டத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 80 ஆயிரத்து 805 ஆக உயர்ந்துள்ளது. இதில் கடந்த 3-ந்தேதி முதல் இன்று வரை 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் இன்று வரை பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 288 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டம் முழுவதும் முதியவர்கள், இளைஞர்கள், குழந்தைகளில் பலரும் சளி மற்றும் இருமல் தொல்லையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாணவ-மாணவிகள் ஏராளமானோர் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். சீதோஷ்ண நிலை மாற்றத்தின் காரணமாக காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மாணவ-மாணவிகளுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் பள்ளிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் மாணவ-மாணவிகள் கட்டாயம் முககவசம் அணிந்து வகுப்புகளுக்கு வர வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருந்தாலும், நாகர்கோவில் நகரப் பகுதியில் உள்ள கடை வீதிகளில் பொதுமக்கள் முககவசம் அணியாமல் சுற்றி திரிகிறார்கள். எனவே பொதுமக்கள் பொது இடங்களுக்கு வரும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக அந்த பகுதியிலுள்ள மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News