உள்ளூர் செய்திகள்

சென்னையில் 75-வது சுதந்திரதின விழா: அரசியல் கட்சி அலுவலகங்களில் தேசிய கொடியேற்றி கொண்டாட்டம்

Update: 2022-08-15 09:57 GMT
  • தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் முன்புள்ள கொடி கம்பத்தில் காலை 8 மணிக்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
  • டி.ஆர்.பாலு எம்.பி. அமைச்சர் சேகர்பாபு, கவிஞர் காசிமுத்து மாணிக்கம், பூச்சி முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சென்னை:

இந்தியாவில் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா அரசியல் கட்சி அலுவலகங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்திபவன் தேசிய கொடி வண்ணத்தில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இன்று காலையில் சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் உள்ள தியாகி சத்தியமூர்த்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.

அதைத்தொடர்ந்து அங்குள்ள 150 அடி உயர கொடி கம்பத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தேசிய கொடியேற்றினார். அதைத்தொடர்ந்து சேவா தள தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் சுதந்திர தின உரையாற்றினார்.

விழாவில் முன்னாள் மாநில தலைவர்கள் குமரி அனந்தன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, மாநில நிர்வாகிகள் கோபண்ணா, தாமோதரன், சி.டி.மெய்யப்பன், பொன்கிருஷ்ண மூர்த்தி, ரங்கபாஷ்யம், ஆர்.வி.சிவராமன், கீழானூர் ராஜேந்திரன், எஸ்.ஏ.வாசு, அகரம் கோபி, மாவட்ட தலைவர்கள் ரஞ்சன்குமார், சிவராஜசேகரன், எம்.ஏ. முத்தழகன், டில்லிபாபு, எம்.எஸ்.திரவியம், நாஞ்சில் பிரசாத், துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நாடு சுதந்திரம் அடைந்த அன்று இரவு 12 மணிக்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் முன்பு காமராஜர் தேசிய கொடியை ஏற்றி இருக்கிறார். அதன் நினைவாக 19.8.1947 அன்று கொடிக்கம்பம் நடப்பட்டுள்ளது. அந்த கொடிக்கம்பத்தில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தில் நள்ளிரவு கொடி ஏற்றப்படுகிறது.

இந்த ஆண்டும் நேற்று இரவு 12 மணிக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் சிவராஜ சேகரன் தலைமையில் காங்கிரசார் தேசிய கொடி ஏற்றினார்கள்.

தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் முன்புள்ள கொடி கம்பத்தில் காலை 8 மணிக்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

டி.ஆர்.பாலு எம்.பி. அமைச்சர் சேகர்பாபு, கவிஞர் காசிமுத்து மாணிக்கம், பூச்சி முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தி.நகர் வைத்தியராமன் தெருவில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தேசிய கொடி ஏற்றினார். அதைத்தொடர்ந்து இனிப்பு வழங்கினார்.

பாரத மாதா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, டாக்டர் ஹண்டே, தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.

இதில் மாநில நிர்வாகிகள் சக்திவேல், திருவேங்கடம், ஜி.ஆர். வெங்கடேஷ், ஆர்.எஸ்.முத்து, ராணி கிருஷ்ணன், ராஜம் எம்.பி.நாதன், நாகராஜன், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், முனவர் பாட்சா, கோவிந்த சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் அவரது வீட்டின் முன்பு தேசிய கொடியேற்றினார்.

ஓ.பன்னீர்செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் தேசிய கொடியேற்றினார்.

தி.நகர் வைத்தியராமன் தெருவில் உள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேசிய கொடியேற்றினார். அதைத் தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

சென்னை போக் ரோட்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேசிய கொடியேற்றினார். மாநில செயலாளர் முத்தரசன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News