உள்ளூர் செய்திகள்

காசிமேட்டில் குழாய் உடைந்ததில் 1 டன் கச்சா எண்ணை வீணாக வெளியேறியது

Published On 2022-09-27 08:59 GMT   |   Update On 2022-09-27 08:59 GMT
  • கச்சா எண்ணை அதிக அளவில் வெளியேறி தரையில் குளம் போல் தேங்கியது.
  • தரையில் வழிந்தோடும் கச்சா எண்ணை கடல் தண்ணீரில் கலக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

ராயபுரம்:

சென்னை துறைமுகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் கச்சா எண்ணை, ராட்சத குழாய் மூலம் திருவொற்றியூர் பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்த குழாய்கள் ராயபுரம், காசிமேடு வழியாக செல்கின்றன.

இந்த நிலையில் மலேசியாவில் இருந்து பாமாயிலுக்கான கச்சா எண்ணை கப்பல் மூலம் சென்னை துறைமுகத்துக்கு வந்தது. பின்னர் கச்சா எண்ணை ராட்சத குழாய்கள் வழியாக திருவொற்றியூர் திருச்சினாங்குப்பத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டு வந்தன.

நேற்று இரவு 7 மணியளவில் காசிமேட்டில் உள்ள விசைப்படகு கட்டும் இடம் அருகே பூமிக்கு அடியில் சென்ற ராட்சத குழாய் திடீரென உடைந்தது. இதனால் அதன் வழியாக சென்ற பாமாயில் கச்சா எண்ணை வெளியேறி தரையின் மேல் பகுதிக்கு வந்தது.

சிறிது நேரத்தில் கச்சா எண்ணை அதிக அளவில் வெளியேறி தரையில் குளம் போல் தேங்கியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்ற மீனவர்கள் போலீசாருக்கும், தனியார் நிறுவன அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதுபற்றி அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தரையில் வீணாக வெளியேறிய கச்சா எண்ணையை மோட்டார் மூலம் வாளியில் உறிஞ்சி எடுத்தனர். எனினும் குழாய் உடைப்பால் தொடர்ந்து கச்சா எண்ணை அதிக அளவில் வெளியேறியபடி இருந்தது.

இதையடுத்து கூடுதல் லாரிகள் அங்கு வரவழைக்கப்பட்டன. அப்பகுதியில் கச்சா எண்ணை சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு தரையில் பரவி காணப்பட்டது.

குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் கடல் பகுதி உள்ளது. இதனால் தரையில் வழிந்தோடும் கச்சா எண்ணை கடல் தண்ணீரில் கலக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையே பூமிக்கடியில் இருந்து வெளியே கச்சா எண்ணை மழைநீர் கால்வாயில் கலந்தது. இதனால் கச்சா எண்ணை கடலில் கலக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

இதனை தடுக்க தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சுமார் 1 டன் கச்சா எண்ணை வீணாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் கச்சா எண்ணை வீணாவதை தடுக்க குழாய் உடைந்த இடத்தை ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து மீனவ கிராம மக்கள் கூறும்போது, 'இதே போல் கடந்த 2019-ம் ஆண்டும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இருந்தது. தொடர்ந்து இதேபோல சம்பவங்கள் நடந்து வருகின்றன. பூமிக்கடியில் புதைக்கப்பட்ட எண்ணை குழாய்கள் பல ஆண்டுகள் ஆனதால் பழுதடைந்து இருக்கலாம். இதனை ஆய்வு செய்து எண்ணை குழாய் உடைப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்' என்றனர்.

Similar News