உள்ளூர் செய்திகள்

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்

Published On 2022-06-25 07:54 GMT   |   Update On 2022-06-25 07:54 GMT
  • குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
  • ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கடைகள் அனைத்தும் பயனற்று கிடக்கின்றன.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் முக்கியப் பிரச்சினையாக குடிநீர் பிரச்சினை உள்ளது. வாரம் ஒருமுறை மட்டுமே குடிநீர் கிடைப்பதால் மக்கள் பணம் கொடுத்து குடிநீரை வாங்க வேண்டிய அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

இங்குள்ள ஆதி ஜெகநாதர் கோவில் ராமர் காலத்திற்கு முந்தைய காலக் கோவில் ஆகும். இது 108 திவ்ய தேசங்களில் 44-வது திவ்ய தேசமாக விளங்குகிறது. திருமணத்தடை, குழந்தைபேறு வேண்டி இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

பெருமை வாய்ந்த கோவில் உள்ள ஊரில் எங்கு பார்த்தாலும் குப்பையாக உள்ளது. குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் தீயிட்டு எரிக்கப்படுகிறது. மெயின் ரோடுகள் தவிர மற்ற தெருக்களில் சரியான சாலை வசதி இல்லை.

இந்த ஊர் மக்கள் குறிப்பிட்டு சொல்லும் முக்கிய பிரச்சினையாக குடிநீர் பிரச்சனை உள்ளது. 2 நாட்களுக்கு ஒருமுறை, 4 நாட்களுக்கு ஒருமுறை, சில நேரங்களில் வாரத்திற்கு ஒரு முறை என குடிநீர் வருகிறது. அதுவும் காலையில் குறிப்பிட்ட நேரத்திற்கே வரும். அதை தவற விட்டால் தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை. வெளியில் பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும்.

திருப்புல்லாணி ஊருக்குள் நுழையும் இடத்தில் ஊரணி உள்ளது. அதை மக்கள் பயன்படுத்துவதைத் தவிர பன்றிகளே பயன்படுத்துகின்றன. இங்கு சரியான படித்துறைகளும் இல்லை. திருப்புல்லாணியில் 2016-17-ல் கட்டப்பட்டு இதுவரை திறக்கப்படாமல் புதிய மீன் மார்க்கெட் உள்ளது. ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கடைகள் அனைத்தும் பயனற்று கிடக்கின்றன.

இந்த மார்க்கெட்டிற்கு எதிரே கருவேல முட்கள் மண்டி கிடப்பதுடன் குப்பை, கழிவுகளை கொட்டுகின்றனர். திருப்புல்லாணி ஊராட்சி நிர்வாகம், குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து மக்களின் குறைகளை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News