உள்ளூர் செய்திகள்

குறைதீர்க்கும் முகாமில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். 

குறை தீர்க்கும் முகாம்

Update: 2022-09-27 08:20 GMT
  • ராமநாதபுரத்தில் நடந்த குறை தீர்க்கும் முகாமில் 296 பேர் மனு வழங்கினர்.
  • சுடுகாடு சாலையும் குண்டும் குழியுமாக புதர்மண்டி கிடக்கிறது. இவற்றை சரிசெய்ய கோரி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர், காமாட்சி கணேசன் முன்னிலை வகித்தார்.

பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்த 296 மனுக்கள் பெறப்பட்டு மனுதாரர்கள் முன்னிலையில் கலெக்டர் விசாரணை செய்தார். இந்த மனுக்களை தொடர்புடைய அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் குறித்த மனுக்களே அதிகளவு வரப் பெற்றன. கலெக்டர் கூறுகையில், ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்து 1 மாத காலத்திற்குள் தீர்வு வழங்க வேண்டும். தீர்வு வழங்க முடியாத மனுக்கள் குறித்து மனுதாரர்களிடம் அதற்கான காரணம் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.

அப்பொழுது தான் அதுபோன்ற மனுக்கள் திரும்பத்திரும்ப வராது. பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும் என்றார்.

ராமநாதபுரம் நகரின் மையப்பகுதியான அண்ணா சிலை அருகில் ஜெகன் தியேட்டர் வளைவில் தொடர்ந்து சாலை விபத்து நடப்பதால் விபத்தை தடுக்கும் வகையில் சாலையின் இருபுறமும் வேகத்தடை அமைத்து தர வேண்டும் என்று த.மு.மு.க. தலைவர் முஹம்மது அமீன் தலைமையில், நகர் செயலாளர் முகம்மது தமீம், ம.ம.க.நகர் செயலாளர் முகம்மது தாஜுதீன், துணைச் செயலாளர் முகம்மது அப்பாஸ் ஆகியோர் மனு அளித்தனர்.

ராமநாதபுரம் காரேந்தல் கிராம தலைவர் காளீஸ்வரன் தலைமையில் பொதுமக்கள் மனு அளித்தனர். அதில், தொருவளூருக்கு செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது. கண்மாய் வடிகால் வாய்க்கால் சேதத்தால் தண்ணீர் வீணாகி வயலுக்குள் வருகிறது. சுடுகாடு சாலையும் குண்டும் குழியுமாக புதர்மண்டி கிடக்கிறது. இவற்றை சரிசெய்ய கோரி மனு கொடுத்தனர்.

Tags:    

Similar News