உள்ளூர் செய்திகள்

அரசு மருத்துவமனையில் மின்கசிவால் தீ விபத்து

Published On 2022-09-27 08:21 GMT   |   Update On 2022-09-27 08:21 GMT
  • ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.
  • ஏ. சி. சாதனம் தொடா்ந்து எரிந்தபடியே இருந்ததால் அப்பகுதி புகை மண்டலமாகியது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் பழைய பிரசவ சிகிச்சை பிரிவின் முதல் தளத்தில் இடதுபுறத்தில் அறுவைச்சிகிச்சைப் பிரிவும், வலதுபுறத்தில் பச்சிளம் குழந்தைகள் நல சிகிச்சைப்பிரிவும் செயல்பட்டு வருகின்றன. இதில் குழந்தைகள் நலப் பிரிவில் 31 குழந்தைகள், தாய்மாா்களுடன் சிகிச்சையில் இருந்தனா்.

இந்த நிலையில் நேற்று மாலை அறுவை சிகிச்சைப் பிரிவில் உள்ள ஏ.சி.யில் மின் கசிவு காரணமாக தீப்பற்றியது. இதனை கண்ட ஊழியா்கள் தீயை அணைக்க முயற்சித்தனா். இருப்பினும் ஏ. சி. சாதனம் தொடா்ந்து எரிந்தபடியே இருந்ததால் அப்பகுதி புகை மண்டலமாகியது.

உடனடியாக அருகில் குழந்தைகள் நலப்பிரிவில் இருந்த குழந்தைகள், பெண்களை அங்கிருந்த செவிலியா்கள் வெளியேற்றினா்.

தகவல் அறிந்து வந்த ராமநாதபுரம் தீயணைப்புத்துறை அலுவலா் ராஜேந்திரன் தலைமையிலான வீரா்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனா். சம்பவம் இடத்தை மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலா் (பொறுப்பு) முகம்மது சுலைமான் பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் கூறுகையில், மின்கசிவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது என்றாா்.

Tags:    

Similar News