உள்ளூர் செய்திகள்

மூதாட்டியின் உடல் நடுரோட்டில் வைக்கப்பட்டிருந்த காட்சி.


அன்னூர் அருகே மயானத்தில் புதைக்க எதிர்ப்பு- 102 வயது மூதாட்டியின் உடலை நடுரோட்டில் வைத்து போராட்டம்

Published On 2022-12-04 11:00 GMT   |   Update On 2022-12-04 11:00 GMT
  • 102 வயதான மூதாட்டியான இவர் வயது முதிர்வு காரணமாக நேற்று மரணம் அடைந்தார்.
  • மயானத்தில் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.

அன்னூர்:

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள காரே கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒண்ணக்கர சம்பாளையம் காலனியைச் சேர்ந்தவர் ரங்கம்மாள். 102 வயதான மூதாட்டியான இவர் வயது முதிர்வு காரணமாக நேற்று மரணம் அடைந்தார்.

அவரது உடலை அடக்கம் செய்வதற்காக ஒண்ணக்கரசம் பாளையத்தில் இருந்து காரே கவுண்டம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள பொதுமயானத்துக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.

ஆனால் இதற்கு மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பிட்ட அந்த மயானத்தில் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த மூதாட்டியின் உறவினர்கள் உடலை நடுரோட்டில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலையில் தொடங்கிய போராட்டம் இரவு வெகு நேரமாகியும் நீடித்தது.

தகவல் அறிந்த கோவை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி. பாலாஜி, அன்னூர் இன்ஸ்பெக்டர் நித்யா, அன்னூர் தாசில்தார் த்கராஜ் மற்றும் ஊராட்சி தலைவர் தங்கராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மூதாட்டியின் உறவினர்கள் தாங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வந்த ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயானத்தில் பாலம் கட்டி சுருக்கி விட்டனர். அங்கு புதைப்பதற்கு இடம் இல்லை. இதனால் இங்கு கொண்டு வந்ததாக தெரிவித்தனர்.

இதற்கு எதிர்தரப்பினர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே செல்கிறது. இதைத்தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

நள்ளிரவில் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து குரும்பபாளையத்தில் உள்ள மயானத்தில் மூதாட்டி உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அதிகாலை 2 மணிக்கு குரும்பபாளையம் மயானத்தில் ரங்கம்மாளின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அதன்பிறகே அங்கு நிலவி வந்த பதட்டம் தணிந்தது.

Similar News