உள்ளூர் செய்திகள்

அரசு டவுன் பஸ்சில் பணம் கொடுத்து டிக்கெட் கேட்டு அடம் பிடித்த மூதாட்டி

Published On 2022-09-30 02:10 GMT   |   Update On 2022-09-30 02:10 GMT
  • மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு அரசு டவுன் பஸ்களில் இலவசம் என்று அறிவித்தார்.
  • தினமும் ஏராளமான பெண்கள் அரசு டவுன் பஸ்சில் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள்.

கோவை :

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றதும், பெண்களுக்கு அரசு டவுன் பஸ்களில் இலவசம் என்று அறிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் தினமும் ஏராளமான பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், கோவையில் ஒரு அரசு டவுன் பஸ்சில் ஏறிய மூதாட்டி ஒருவர், எனக்கு இலவச டிக்கெட் வேண்டாம், நான் ஓசியில் செல்ல விரும்பவில்லை, பணத்தை வாங்கிக்கொண்டு டிக்கெட் கொடு என்று கேட்டு கண்டக்டரிடம் அடம் பிடித்தார். அதன் விவரம் வருமாறு:-

கோவை காந்திபுரத்தில் இருந்து மதுக்கரை, பாலத்துறை வழியாக கண்ணம்மாநாயக்கனூர் செல்லும் (எண் 50) அரசு டவுன் பஸ் மதுக்கரையில் இருந்து பாலத்துறை நோக்கி நேற்று காலை 9.50 மணிக்கு சென்றது. அதில் வால்பாறையை சேர்ந்த வினித் (வயது 28) என்பவர் கண்டக்டராக இருந்தார். மதுக்கரை மார்க்கெட் பகுதிக்கு வந்தபோது, குரும்பபாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவரின் மனைவி துளசியம்மாள் (70) என்பவர் பஸ்சில் ஏறினார்.

அவரிடம் எங்கு செல்ல வேண்டும் என்று கண்டக்டர் கேட்டார். அதற்கு அவர் பாலத்துறைக்கு செல்ல வேண்டும் என்றார். உடனே கண்டக்டர், இலவச டிக்கெட்டை மூதாட்டியிடம் கொடுத்தார். அதற்கான பணத்தை கண்டக்டரிடம் மூதாட்டி கொடுத்தார். உடனே அவர் பணம் வேண்டாம்.... இலவசம்தான் என்று கூறினார். அதற்கு அந்த மூதாட்டி காசு இல்லாம எனக்கு டிக்கெட் வேண்டாம், நான் ஓசியில் வரமாட்டேன் என்றார்.

அதற்கு அந்த கண்டக்டர் எம்மா டிக்கெட்ட வாங்கி வைமா... ஏம்மா இப்படி பண்றீங்க என்றார். அதற்கு அந்த மூதாட்டி மீண்டும் நான் ஓசியில் வர மாட்டேன். பணத்தை வாங்கிக்கொள் என்று தன்னிடம் இருந்த பணத்தை கண்டக்டரிடம் நீட்டினார். ஏம்மா... சும்மா இரும்மா... ஏம்மா இப்படி பண்றீங்க, டிக்கெட்ட வாங்கிக்கோங்க... என்று கண்டக்டர் கூற, அதற்கு மீண்டும் அந்த மூதாட்டி தன்னிடம் இருந்த பணத்தை நீட்டியபடி நான் ஓசியில் வர மாட்டேன், பணத்தை வாங்கிக்கொண்டு டிக்கெட் கொடு என்றார்.

உடனே கண்டக்டர், பஸ் இலவசமாக விட்டு உள்ளார்கள். அதனால் பணம் கொடுக்க வேண்டாம் என்றார். அதற்கு மீண்டும் அந்த மூதாட்டி எனக்கு பிரீ வேண்டாம், வேண்டவே வேண்டாம், நா ஓசியில வரல, நீ பணத்தை வாங்கிக்கொண்டு எனக்கு டிக்கெட் கொடு என்று அடம் பிடித்தார். ஆனாலும் கண்டக்டா் நான் காசு வாங்க மாட்டேன் என்றார். உடனே அந்த மூதாட்டி காசு வாங்கலனா எனக்கு டிக்கெட் வேண்டாம் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து அந்த மூதாட்டி நான் ஓசியில வரமாட்டேன், பிரீயா தமிழ்நாடு முழுவதும் போகட்டும் நான் ஓசில வர மாட்டேன், காசு கொடுத்துதான் வருவேன். இந்தா காச பிடி... என்றார். அதற்கு கண்டக்டர் பிரீ டிக்கெட்டுக்கு நான் எப்படி காசு வாங்கி டிக்கெட் கொடுக்க முடியும் என்றார். அதற்கு அந்த மூதாட்டி காச வாங்கிவிட்டு சில்லரைய கொடு என்றார்.

உடனே கண்டக்டர் ஏம்மா... இப்படி என்ன தொந்தரவு செய்கிறீங்க.... என்றார். அதற்கு அவர் நான் என்ன தொந்தரவு செய்கிறேன் என்றதற்கு, கண்டக்டர் ஏம்மா என்ன தொந்தரவு செய்கிறீங்க... இறங்கி போம்மா.... எனக்கு காசு வேண்டாம், அதா பிரீயா விட்டுட்டாங்கல்லா என்றார்.

அதற்கு அந்த மூதாட்டி அதான் பிரீயா விட்டுட்டு எக்ஸ்டா வாங்குறாங்கலா என்றதற்கு கண்டக்டர் அட... பிரீதாம்மா விட்டுட்டு போங்கமா என்றார். ஆனால் அந்த மூதாட்டி எனக்கு பிரீ வேண்டாம், இந்தா காச பிடி என்று கண்டக்டர் கையில் தன்னிடம் இருந்த ரூ.20-ஐ வலுக்கட்டாயமாக திணித்தார்.

அதற்கு அந்த கண்டக்டர் ஏம்மா... என்ன இப்படி தொந்தரவு செய்கிறீங்க என்று கூறிவிட்டு வேறு வழி இ்ல்லாமல் அந்த பணத்தை பெற்று விட்டு ரூ.5-க்கு டிக்கெட் கொடுத்துவிட்டு, மீதம் ரூ.15-ஐ அந்த மூதாட்டி கையில் கொடுத்தார்.

இந்த சம்பவத்தை அந்த பஸ்சில் இருந்த சக பயணிகள் தங்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தனர். தற்போது அது வைரலாகி வருகிறது.

Similar News