உள்ளூர் செய்திகள்

விபத்தில் சிக்கிய பஸ் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றப்பட்ட காட்சி.

தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகில் லாரி மீது பஸ் மோதி விபத்து

Published On 2022-08-18 09:45 GMT   |   Update On 2022-08-18 09:45 GMT
  • நேற்றிரவு தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே, முன்னால் கோழி தீவனம் ஏற்றி சென்ற லாரியை பஸ் ஒன்று முந்த முயன்றது.
  • எதிர்பாராத விதமாக அந்த லாரி மீது சுற்றுலா செல்லும் பஸ் மோதியது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்துள்ள பிக்கிலி கொல்லப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்து வருகிறது.

இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் நேற்று முன்தினம் 9 பஸ்களில் ராமேஸ்வரம் சுற்றுலா சென்றனர். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது நேற்றிரவு தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே, முன்னால் கோழி தீவனம் ஏற்றி சென்ற லாரியை பஸ் ஒன்று முந்த முயன்றது.

இதில் எதிர்பாரா தவிதமாக அந்த லாரி மீது சுற்றுலா பஸ் மோதியது. அந்த வேகத்தில் பின்னால் நகர்ந்து சாலையோர தடுப்பு கம்பியில் பஸ் மோதி நின்றது.

இதில் பஸ்சை ஓட்டி வந்த மாரண்டஅள்ளியை சேர்ந்த ராஜா (வயது35), சங்கர் மகன் எழில்அரசன், சிவக்குமார் மகன் நவின்குமார், பாப்பாத்தி, ராஜா, காளியம்மாள், தாளம்மாள், மாதையன், மாதேஷ், சிவக்குமார், பெருமாள், முத்துலெட்சுமி, ராஜா, பிரேமா, சங்கீதா, சின்னபொன்னு, குப்பம்மாள், சின்னகன்னு, அக்கம்மாள் உள்பட 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தை பார்த்து அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே இதுபற்றி தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் போக்கு வரத்து பாதிக்கப் பட்டது. உடனே பஸ்சை அப்புறப்படுத்தி போக்கு வரத்தை போலீசார் சரி செய்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News