உள்ளூர் செய்திகள்

நல்லம்பள்ளி அருகே குடும்ப தகராறில் பெண்ணை கத்தியால் வெட்டிய கணவன்

Update: 2022-08-15 09:52 GMT
  • கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு தொடர்ந்து இருந்தார்.
  • கத்தியை எடுத்து மணிமேகலையை சரமாரியாக குத்தி வெட்டினார்.

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ஏலகிரி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது42). இவரது மனைவி மணிமேகலை (36). இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் பெருமாளுக்கும், மணிமேகலைக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று மீண்டும் தகராறு நடந்தது.

இதில் கோபித்து விட்டு மணிமேகலை எள்ளுக்குழியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் கடந்த 3 ஆண்டுகளாக கணவரை பிரிந்து அவர் 4 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

தனியார் மருத்துவமனை ஒன்றில் மணிமேகலை வேலை பார்த்துக் கொண்டு தன் பிள்ளைகளை படிக்க வைத்து வந்துள்ளார்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு பெருமாள், மணிமேகலை வீட்டிற்கு வந்து அவருடன் வாக்குவாதம் செய்தார். இதில் ஆத்திரம் அடைந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணிமேகலையை சரமாரியாக குத்தி வெட்டினார்.

இதில் கை, தலை, நெஞ்சு உள்ளிட்ட பகுதியில் வெட்டு காயங்கள் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பெருமாளை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News