உள்ளூர் செய்திகள்

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் கலெக்டர் அனீஷ்சேகர் தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
கலெக்டர் தேசியகொடி ஏற்றினார்

Update: 2022-08-15 09:27 GMT
  • மதுரையில் 75-வது சுதந்திர தினவிழாவில் கலெக்டர் அனீஷ்தேசேகர் தேசியக்கொடி ஏற்றினார்.
  • விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

மதுரை

75-வது சுதந்திர தினவிழா மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, மீன்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தாட்கோ, கால்நடை பராமரிப்பு, மகளிர் குழு கடன், விலையில்லா தேய்ப்பு பெட்டி, மீன் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் ரூ. 67 லட்சத்து 922 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 40 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை, வணிக வரித்துறை, கால்நடைத்துறை, சமூக ஆர்வலர்கள் உள்பட சிறப்பாக பணியாற்றிய 250 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில் மதுரையில் உள்ள 7 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

விழாவில் தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கர்க், மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், மாவட்ட எஸ்.பி சிவ பிரசாத், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், கூடுதல் கலெக்டர் சரவணன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மேயர் இந்திராணி தேசிய கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரையில் பல்வேறு இடங்களில் இன்று சுதந்திர தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மன்ற செயலாளர் டாக்டர் இஸ்மாயில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். மதுரை பாண்டியன் சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் தலைவர் வில்லாபுரம் ராஜா தேசிய கொடி ஏற்றினார்.

மதுரை பெருங்குடியில் உள்ள சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் கண்ணன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

மதுரையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் சுதந்திர தினவிழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

Tags:    

Similar News