உள்ளூர் செய்திகள்

பெற்றோர், மாணவர்கள் தொடர் போராட்டத்தால் தலைமையாசிரியர்-ஆசிரியருக்கு மீண்டும் பணி

Update: 2022-06-30 09:34 GMT
  • தலைமை ஆசிரியர் சித்ராதேவி (59), ஆசிரியர் மணிகண்டனுக்கு கேக் ஊட்டியுள்ளார். இப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து இருவரும் கடந்த 18-ந்தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
  • இந்நிலையில் தலைமை ஆசிரியை சித்ராதேவி, ஆசிரியர் மணிகண்டன் ஆகிய இருவரது பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டது.

கரூர்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள பங்களாபுதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியர் க.மணிகண்டன் (வயது 48). இவர் கடந்த 16-ந்தேதி பள்ளியில் பிறந்த நாள் கொண்டாடி கேக் வெட்டியுள்ளார். தலைமை ஆசிரியர் சித்ராதேவி (59), ஆசிரியர் மணிகண்டனுக்கு கேக் ஊட்டியுள்ளார். இப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து இருவரும் கடந்த 18-ந்தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் சித்ராதேவி, ஆசிரியர் மணிகண்டன் ஆகிய இருவரது பணியிடை நீக்கத்தை ரத்து செய்து பணி அமர்த்த வலியுறுத்தி பெற்றோர்கள் பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வகுப்பறைகள் வெறச்சோடின.

இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்ரமணியன் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், இருவரும் பணிக்கு திரும்பும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இந்நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2-வது நாளாக பள்ளி வெறிச்சோடியது. இந்நிலையில் தலைமை ஆசிரியை சித்ராதேவி, ஆசிரியர் மணிகண்டன் ஆகிய இருவரது பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அடுத்து இருவரும் நேற்று மாலை பள்ளிக்கு வந்து பணியில் இணைந்தனர்.

Tags:    

Similar News