உள்ளூர் செய்திகள்

பேருந்து நிலைய சுவரில் விழிப்புணர்வு ஓவியங்கள்

Update: 2022-06-28 09:27 GMT
  • பேருந்து நிலைய சுவரில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்படுகிறது.
  • மாநகரில் சுகாதார சீர்கேடும் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை

கரூர்:

கரூர் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பல கட்டிடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, அவற்றின் அருகில் சிறுநீர் கழித்தல், குப்பையை கொட்டுதல் போன்றவை நிகழ்வதால், மாநகரின் அழகு கெடுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.

இதை தடுக்கும் வகையில், கட்டிடங்களில் உள்ள சுவரொட்டிகளை அகற்றி, அப்பகுதியில் மீண்டும் சுவரொட்டி ஒட்டப்படாத வகையிலும், மக்கள் அசுத்தப்படுத்தாத வகையிலும் வண்ண ஓவியங்களை வரைந்து அழகுபடுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.

அதன்ப, எனது கரூர் எனது பெருமை என்ற திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக கரூர் பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியில் உள்ள கட்டிட சுவரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். பின்னர் அந்த சுவரில் வண்ண ஓவியங்கள் வரையும் பணியை ஓவியர்கள் தொடங்கியுள்ளனர்.

இதில் பொது இடங்களில் குப்பையை வீசக்கூடாது, குப்பையை குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும், குப்பையை முறையாக அகற்ற வேண்டும் என்பதை சிறுவர்களின் செயல்கள் மூலம் வலியுறுத்தும் விசதமாக ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. இதை தொடர்ந்து பேருந்து நிலையத்தின் உட்புற சுவர்கள் மற்றும் வெளிப்புற சுற்றுச்சுவர்களிலும் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட உள்ளன. அதில் கழிப்பறை அல்லாத இடங்களில் சிறுநீர் கழிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலான ஓவியங்களும் இடம் பெற உள்ளன.

பேருந்து நிலைய நுழைவாயில் சுவரில் உள்ள திறப்பு விழா கல்வெட்டிலும் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டு, மறைக்கப்பட்டிருந்தது. இந்த சுவரொட்டிகள் தற்போது அகற்றப்பட்ட நிலையில் அதன் மீதும் வண்ணம் தீட்டப்பட்டது. இதையடுத்து கல்வெட்டில் வண்ணம் பூசப்பட்டுள்ளதை அகற்றி அதிலுள்ள தகவல்கள் மக்களுக்கு தெரியும்படி செய்யவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News