உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு சொந்தமான 100 கடைகளை ஏலம் விட கலெக்டர் உத்தரவு

Update: 2022-06-27 08:46 GMT
  • கடற்கரைச்சாலை, விவேகானந்தா ராக் ரோடு, ரத வீதி உள்பட பல இடங்களில் வாடகைக்கு
  • கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியின் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது

கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் நகரசபை அந்தஸ்தில் உள்ள ஒரே பேரூராட்சி கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி ஆகும். இந்த பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் அமைந்துஉள்ளன.

இது ஒரு உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்வதால் பேரூராட்சிக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட கடைகள் கன்னியாகுமரிமெயின் ரோடு, பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு, கடற்கரைச்சாலை, விவேகானந்தா ராக் ரோடு, ரத வீதி உள்பட பல இடங்களில் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

இந்த கடைகள் அனைத்தும் ஏலம் மற்றும் டெண்டர் மூலம் தனியாருக்கு வாடகை அடிப்படையில் குத்தகைக்கு விடப்பட்டுஉள்ளது. தற்போது இந்தக் கடைகளுக்கு வாடகை மறு நிர்ணயம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் இதற்கு கடையை குத்தகைக்கு எடுத்து இருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பேரூராட்சி நிர்வாகம் வாடகையை நிர்ணயம் செய்வதில் காலம் தாழ்த்தி வந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரி பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து பேரூராட்சி கடைகளையும் புதிதாக தற்போதைய வாடகைநிரக்கில் ஏலம் அல்லது டெண்டர் மூலம் குத்தகைக்கு விடவும் தாட்கோ கடைகளுக்கு செயற்பொறியாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் நிர்ணயம் செய்யும் மாத வாடகை நிரக்கில் ஏலம் அல்லது டெண்டர் விடவும் இதர பேரூராட்சிகளின் கடைகள் அனைத்தும் உள்ளூர் வாடகைநிரக்கை ஒப்பீடு செய்து பொதுப்பணித்துறை கட்டிடங்கள் பிரிவு வழியாக மறுமதிப்பீடு பெற்று அதன்படியான மாத வாடகை நிரக்கில் ஏலம் அல்லது டெண்டர் மூலம் குத்தகை விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகத்துக்கு அனுப்பிஉள்ள கடிதம் வாயிலாக உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியின் கூட்டம் நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் கன்னியாகுமரி பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளை ஏலம் விடுவது குறித்து முடிவு செய்யப்படுகிறது.

Tags:    

Similar News