உள்ளூர் செய்திகள்

மு.க.ஸ்டாலினை பார்க்க போலி அடையாள அட்டையுடன் சென்ற சிறை வார்டன்

Published On 2022-12-01 10:39 GMT   |   Update On 2022-12-01 10:39 GMT
  • பொள்ளாச்சி சப்-ஜெயிலில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ள இவர் வார்டனாக பணிபுரிந்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
  • சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து போட்டோ எடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

சென்னை:

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்ப்பதற்கு சபாரி உடை அணிந்திருந்த வாலிபர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை தாண்டி சென்றார்.

அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதற்கு பதில் அளித்த அந்த நபர் சிறை துறையில் இருந்து வருவதாக தெரிவித்தார். இதனால் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தேனாம்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். அண்ணா அரங்கத்தில் விழா நடைபெற்ற மேடை வரையில் அவர் சென்றது போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது.

இதையடுத்து சபாரி வாலிபரை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவரது பெயர் வசந்த்குமார் என்பதும் கோவையில் ரேஸ் கோர்ஸ் பகுதியில் வசித்து வருவதும் தெரிய வந்தது.

பொள்ளாச்சி சப்-ஜெயிலில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ள இவர் வார்டனாக பணிபுரிந்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் தமிழ்நாடு காவல் துறை என்ற பெயரிலான போலி அடையாள அட்டை இருந்தது.

இதையடுத்து அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். கோவையில் இருந்து நண்பர் நாட்ராயன் என்பவருடன் விமானத்தில் வந்த இவர் அவரை வெளியில் நிற்க வைத்து விட்டு மு.க.ஸ்டாலினை பார்க்க சென்றுள்ளார். அப்போதுதான் போலீசில் சிக்கி கொண்டார்.

இதற்கு முன்னதாக அவர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து போட்டோ எடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இவர் எதற்காக முதல்-அமைச்சரை பார்க்க சென்றார் என்பது தெரியவில்லை.

இதுதொடர்பாகவும் அமைச்சரை சந்தித்தது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News