உள்ளூர் செய்திகள்

கொப்பரையில் கூழ் ஊற்றப்பட்ட காட்சி. சிறப்பு அலங்காரத்தில் சக்தி மாரியம்மன்.

கடகத்தூர் கிராமத்தில் 7 வருடங்களுக்கு பிறகு சக்தி மாரியம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்வு

Published On 2022-08-10 10:15 GMT   |   Update On 2022-08-10 10:15 GMT
  • பெண்கள் குடங்களில் வேப்பிலை கட்டி கூழ் குடத்தை தலையில் வைத்தவாறு மங்கள இசை முழங்க முக்கிய வீதி வழியாக ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.
  • கொப்பரையில் கொண்டு வந்திருந்த கூழை ஊற்றி தொடர்ந்து சக்தி மாரியம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பேரிடர் காரணமாக கிராமங்களில் நடைபெறக்கூடிய மாரியம்மன் திருவிழாக்கள் நடைபெறாமல் இருந்தது.

இந்த வருடம் தருமபுரி அருகே உள்ள கடகத்தூர் பகுதியில் சக்தி மாரியம்மன் திருவிழா முதல் நாள் நிகழ்ச்சியாக பட்டாளம்மனுக்கு பொங்கல் வைத்து கங்கை பூஜை செய்தனர்.

பின்னர் பட்டாளம்மன் சாமி திருவீதி உலாவுடன் விழா தொடங்கியது.

நேற்று 9-ம் தேதி இரண்டாம் நாள் திருவிழாவாக சக்தி மாரியம்மன் கூழ் ஊற்றுதல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

500-க்கும் மேற்பட்ட பெண்கள் குடங்களில் வேப்பிலை கட்டி கூழ் குடத்தை தலையில் வைத்தவாறு மங்கள இசை முழங்க முக்கிய வீதி வழியாக ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த கொப்பரையில் கொண்டு வந்திருந்த கூழை ஊற்றி தொடர்ந்து சக்தி மாரியம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றது.

பிறகு வயது முதிர்ந்த 3 மூதாட்டிகளை அழைத்து அவர்களுக்கு பூஜைகள் செய்து அவர்கள் மீது சக்தியை அழைத்து அருள்வாக்கு கேட்டனர்.

பின்னர் கூழ் ஊற்றப்பட்ட கொப்பரைக்கு பூஜைகள் செய்து படைத்த கூழை 3 மூதாட்டிகளை அம்மனாக பாவித்து கொடுத்து பருக வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து அனைவரும் கொப்பரையில் உள்ள அம்மனுக்கு படைத்த கூழை பிரசாதமாக எடுத்துச் சென்றனர்.

வெகு விமர்சையாக நடைபெற்ற கூழ் ஊற்றும் திருவிழாவை ஊர் பிரமுகர்களான முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலு, தி.மு.க. மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சேட்டு, அம்மன் பழனி, அனைத்து கோம்பு கவுண்டர்கள் காமராஜ், வேலன், பச்சையப்பன், மெய்ஞானசுந்தரம், முருகேசன், சேகர், மற்றும் கடகத்தூர் இளைஞர் படை ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

Similar News