உள்ளூர் செய்திகள்

சாலையை விரிவுபடுத்தி குறுக்கே தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் குறிப்பிடும் 4 ரோடு பிரிவு சாலையை படத்தில் காணலாம்.

பாலக்கோட்டில் விபத்தை தவிர்க்க சாலை நடுவே தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்

Published On 2022-06-27 08:18 GMT   |   Update On 2022-06-27 08:18 GMT
  • அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு படுகாயம் அடைந்து வருகின்றனர்.
  • போதிய பாதுகாப்பு மற்றும் தடுப்புகள் இல்லாததால் அதிவேகத்தில் வரும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகிறது.

பாலக்கோடு,

பாலக்கோடு புறவழிச்சாலைலிருந்து பேருந்து நிலையத்தை இணைக்கும் 4 ரோடு பிரிவு எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தனியார் வணிக வளாகங்கள், தனியார் மருத்துவமனைகள் , உழவர் சந்தை, வேளாண்மை விற்பனை மற்றும் பதப்படுத்தும் கிடங்கு ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் முக்கிய பிரதான சந்திப்பாக உள்ளது.

இவ்வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், முதியோர் சாலையை கடக்கும்போது அதிவேகத்தில் வரும் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு படுகாயம் அடைந்து வருகின்றனர்.

போக்குவரத்து காவல் அதிகாரிகள் இருந்தும் இந்த பிரிவு சாலையில் போதிய பாதுகாப்பு மற்றும் தடுப்புகள் இல்லாததால் அதிவேகத்தில் வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது .

பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், விபத்துகளை தவிர்க்கும் பொருட்டும் நான்கு பிரிவு சாலை நடுவே சாலையை விரிவாக்கம் செய்து சாலை நடுவே தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News