உள்ளூர் செய்திகள்

அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதி திருக்கோயில் திருப்பணிக்கான நிதியுதவி ரூ.2 லட்சமாக உயர்வு- அமைச்சர் தகவல்

Published On 2022-08-16 16:08 GMT   |   Update On 2022-08-16 16:08 GMT
  • கோயில் பூஜைகள் ஆகம முறைப்படி நடைபெற நடவடிக்கை.
  • பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருகிறோம்.

சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் 2020–21 மற்றும் 2022–23 ஆம் ஆண்டுகளுக்கான சட்டமன்ற மானியக் கோரிக்கைகளின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் முன்னேற்ற பணிகள் குறித்த சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது,

இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் சட்டமன்ற அறிவிப்புகள் குறித்து அதிக எண்ணிக்கையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, அதனை விரைந்து செயல்படுத்தி வருகின்ற ஒரே அரசு திமுக அரசு தான். நமது துறையில் பல்வேறு பணிகளை மிக பெரிய சவால்களை சந்தித்துதான் நிறைவேற்றி வருகிறோம்.

அதேபோல, அதிக அளவில் நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்வதோடு, நேர்மையான வழியில் நியாயத்தின் அடிப்படையில் நல்ல பல தீர்ப்புகளையும் பெற்றுக் கொண்டிருக்கிறோம். இதற்கு காரணம், நமது வெளிப்படையான தன்மை, பாரபட்சமில்லாத செயல்பாடுகள், முழுமையான ஈடுபாடு ஆகியவையே ஆகும்.

கோயில் பூஜைகள் ஆகம முறைப்படியும், இறையன்பர்கள் மகிழ்ச்சி அடையும் வகையிலும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதிலும் நாம் முனைப்போடு செயல்பட்டு வருகிறோம். முதலமைச்சர், கடந்த சனிக்கிழமை அன்று கொளத்தூர், அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகள் இருந்தாலும், இந்து சமய அறநிலையத்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று பாராட்டினார்.

அதேபோல சுதந்திர தின உரையிலும், இந்து சமய அறநிலையத்துறையின் சாதனைகளாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க திட்டம், திருக்கோயில் நிலங்கள் மீட்பு போன்றவற்றை குறிப்பிட்டு முதலமைச்சர் பாராட்டினார். இந்த பாராட்டுக்கள் என்பது துறையினை சேர்ந்த அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றியதால் கிடைத்த வெகுமதியாகும். இப்பணி மென்மேலும் தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை 3 திருக்கோயில்களுக்கு விரிவுப்படுத்துதல், 10 திருக்கோயில்களில் அன்னதானத் திட்டம் புதிதாக தொடங்குதல், 10 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்துதல், பசு மடங்கள் மேம்படுத்துதல், ஒரு கால பூஜை திட்டத்தினை விரிவுப்படுத்துதல் மற்றும் அர்ச்சகர்களுக்கு மாத உதவித் தொகை வழங்குதல்,

தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கிராமப்புற திருக்கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதி திருக்கோயில்களின் திருப்பணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி தலா 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதோடு, திருக்கோயில்களில் எண்ணிக்கையும் ஆண்டிற்கு 2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான 2500 திருக்கோயில்களையும் தேர்வு செய்து ஒரே நாளில் காசோலைகள் வழங்கிடும் விழாவை விரைவில் நடத்திட வேண்டும். அதற்கான ஆக்கப்பூர்வ பணிகளை இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்திட வேண்டும். அப்பணிகளை முடித்து காசோலையை வழங்கிடும்போது அது ஒரு மிகப்பெரிய சாதனையாகவும், அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் பெரும் நிகழ்வாகவும் அமைந்திடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News