உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

போதைப் பொருட்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை- கலெக்டர் பேட்டி

Published On 2022-08-11 10:36 GMT   |   Update On 2022-08-11 10:36 GMT
  • தமிழகத்தில் இன்று அனைத்து பள்ளிகளிலும் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ -மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்:

தமிழகத்தில் இன்று அனைத்து பள்ளிகளிலும் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன்படி தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசினர் ராஜா மேல்நிலைப் பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ -மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி விழிப்புணர்வு உறுதி மொழியை வாசித்தார். போதை நமக்கு பகை, போதையே பழகாதே, புன்னகையை இழக்காதே, ஆயுளை அழித்திடும் போதை பழக்கம் வேண்டாமே , பாதையை மாற்றுவோம், போதையை வெறுப்போம் என்று அவர் வாசிக்க மாணவ- மாணவிகள் மற்றும் அங்கிருந்தவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியதற்காக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு தமிழக அரசு விருது அறிவித்துள்ளது. இதற்காக கலெக்டரை பாராட்டி அவருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.

பின்னர் கலெக்டர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் ஆணைப்படி இன்று பள்ளிகளில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மத்தியில் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி தொடர்ந்து கூறப்படும். தஞ்சை மாவட்டத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. போதைப் பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சை மாவட்டம் போதைப் பொருட்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி‌. நீலமேகம், மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார், வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார் மணிகண்டன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவி அலுவலர்கள் பழனிவேலு (மேல்நிலை), மாதவன் (இடைநிலை) மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News