போலீஸ்காரர் உள்பட 5 பேரை வெட்டி பணம்-செல்போன் கொள்ளை: ரவுடி உள்பட 5 பேர் சிக்கினர்
- போலீசார் அப்பகுதி முழுவதையும் சுற்றி வளைத்து இரவு முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
- அடுத்தடுத்து வழிப்பறி நடந்த சம்பவம் திருத்தணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருத்தணி:
திருத்தணியை சேர்ந்தவர் சுரேந்தர்(34).கடம்பத்தூர் போலீஸ்நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு பணி முடிந்து சாதாரண உடையில் வீடுநோக்கி வந்து கொண்டு இருந்தார். திருத்தணி, அக்கயாநாயுடு தெருப்பகுதியில் வந்த போது மர்ம வாலிபர்கள் கையில் கத்தி, அரிவாளுடன் சுரேந்தரை வழிமறித்தனர். மேலும் அவர்கள் பணத்தை கொடுக்கும்படி மிரட்டினர். சுரேந்தர் தான் போலீஸ்காரர் என்று கூறியதால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் கத்தியால் அவரை வெட்டினர். பின்னர் சுரேந்தரிடம் இருந்த ரூ.15 ஆயிரத்தை பறித்து விரட்டியடித்தனர்.
இதேபோல் அவ்வழியே வந்த கோழிக்கடை நடத்தி வரும் ஜாபர் அலி, தனியார் நிறுவன ஊழியர் தினேஷ் மேலும் 4 பேரை அடுத்தடுத்து மர்ம நபர்கள் வழிமறித்து வெட்டினர்.
மேலும் கத்தி முனையில் மிரட்டி அவர்களிடம் இருந்த பணம் மற்றும் செல்போன்களை பறித்து விரட்டினர். இதில் அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் சுரேந்தர் உள்பட 3 பேர் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் விரைந்து வந்து அப்பகுதியை சுற்றி வளைத்து வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
உடனே மர்ம வாலிபர்கள் திருத்தணிகோவில் மலைப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அப்பகுதி முழுவதையும் சுற்றி வளைத்து இரவு முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே இந்த வழிப்பறி தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சஞ்சய் உள்பட 5 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவர்களிடம் இருந்து 9 கத்தி, மோட்டார் சைக்கிள் செல்போன், ரூ.15 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீஸ்காரர் உள்பட 5 பேரை வெட்டி ஒரே நாளில் அடுத்தடுத்து வழிப்பறி நடந்த சம்பவம் திருத்தணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.