உள்ளூர் செய்திகள்
பழனி நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்ட காட்சி

அ.தி.மு.க. கம்யூனிஸ்டு எதிர்ப்புகளுக்கிடையே பழனி நகராட்சியில் சொத்துவரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றம்

Published On 2022-05-23 06:02 GMT   |   Update On 2022-05-23 06:02 GMT
அ.தி.மு.க. கம்யூனிஸ்டு எதிர்ப்புகளுக்கிடையே பழனி நகராட்சியில் சொத்துவரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது
பழனி:

பழனி நகராட்சியில் சொத்து வரி உயர்வு சீராய்வு சிறப்பு நகர்மன்ற கூட்டம் இன்று நகரசபை தலைவர் உமா மகேஷ்வரி தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் கமலா முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் தமிழக அரசு அறிவித்த சொத்து வரி உயர்வு குறித்த தீர்மானம் சபையில் விவாதத்துக்கு வைக்கப்பட்டது.

இதில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் முருகானந்தம் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கடும் பாதிப்பு அடையும் சொத்து வரி உயர்வு தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது. அனைவரின் கருத்துக்களை கேட்டபிறகுதான் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.

ஆனால் தமிழக அரசு வழிகாட்டுதலின்படி அனைத்து உள்ளாட்சி மன்றங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. எனவே இந்த தீர்மானத்தை நிறைவேற்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தலைவர் தெரிவித்தார்.

நகர்மன்ற துணை–த்தலைவரும், கம்யூனிஸ்டு உறுப்பினருமான கந்தசாமி பேசுகையில், சொத்து வரி உயர்வை நகராட்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். இதனால் ஏழை எளிய மக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகும் நிலை ஏற்படும் என்றார்.

அதற்கு தி.மு.க. உறுப்பினர்கள், நாங்கள் ஆதரவளித்ததால்தான் நகர்மன்ற துணைத் தலைவராக உள்ளீர்கள். நீங்களே இந்த தீர்மானத்துக்கு எப்படி எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்றனர். உறுப்பினர்களிடையே தொடர்ந்து காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News