உள்ளூர் செய்திகள்
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் குறைந்த அளவு தக்காளியே விற்பனைக்கு வந்தது.

தக்காளி விலை தொடர் உயர்வால் மக்கள் கவலை

Published On 2022-05-23 05:50 GMT   |   Update On 2022-05-23 05:50 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் தக்காளி விலை உயர்ந்து வருதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், வடமதுரை, எரியோடு, வேடசந்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மார்க்கெட்டுகளில் தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு அம்பிளிக்கை, சாலைப்புதூர், கள்ளிமந்தையம், தங்கச்சியம்மாபட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து தக்காளி கொண்டுவரப்படுகிறது.

அவை வியாபாரிகள் மூலம் ஏலம் விடப்பட்டு விற்பனைக்கு வாங்கப்படுகிறது. கடந்த மாதம் வரை 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனையானது. ஆனால் தற்போது ஒரு பெட்டி ரூ.1000 முதல் ரூ.1100 வரை விலை அதிகரித்துள்ளது. உள்ளூர் வரத்து குறைந்துள்ளதால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 2000 பெட்டிகள் வந்த நிலையில் கடந்த சில நாட்களாக 600 முதல் 700 பெட்டிகளே வருகிறது. இதுவே விலையேற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. வெளியூர்களுக்கு அனுப்ப முடியாத நிலையில் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமே தக்காளியை வாங்கிச்செல்கின்றனர்.

இதேபோல் அய்யலூர், எரியோடு சந்தையிலும் தக்காளி வரத்து குறைந்துள்ளது. நல்ல விலை கிடைப்பதால் ஒரு சில இடங்களில் விவசாயிகள் காய்களாக உள்ளபோதும் அதனை பறித்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.  வெளிச்சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 மற்றும் அதற்கு மேல் விற்பனையாகிறது. திண்டுக்கல் உழவர் சந்தையிலேயே ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனையாகிறது. இதனால் சாமானிய மக்கள் தக்காளியை வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் தமிழக அரசு சார்பில் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் பண்ணைப்பசுமை கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் அதுபோன்ற எந்த கடைகளும் திறக்கப்படவில்லை. எனவே கூட்டுறவு அங்காடிகள் மற்றும் ரேசன் கடைகளில் தக்காளிகள் விற்பனை செய்ய முன்வரவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News