உள்ளூர் செய்திகள்
வெடிகுண்டு மிரட்டல்

கோவை மத்திய ஜெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2022-05-23 04:49 GMT   |   Update On 2022-05-23 04:49 GMT
மத்திய சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை அவர் தொடர்பு கொண்டு பேசிய செல்போன் எண்ணை வைத்து தேடி வருகிறார்கள்.

கோவை:

கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று மாலை 5.20 மணி அளவில் கோவை மத்திய சிறையில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு ஒரு செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பை அப்போது பணியில் இருந்த போலீஸ்காரர் முத்துப்பாண்டி என்பவர் எடுத்து பேசினார்.

அதில் பேசிய மர்மநபர் ஜெயிலில் பணியாற்றும் போலீஸ்காரர்கள் சீருடை அணிந்து வெளியே வந்தால் கொலை செய்து விடுவேன் என்றும், கோவை மத்திய சிறையில் வெடிகுண்டு வைக்கப் போவதாக கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

இது குறித்து போலீஸ்காரர் சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சிறை அதிகாரிகள் இது குறித்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் போலீஸ் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டை கண்டுபிடிக்கும் நவீன கருவிகளுடன் கோவை மத்திய சிறைக்கு வந்தனர்.

சிறை முழுவதும் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெடிகுண்டு ஏதும் உள்ளதா? என தேடினர். ஆனால் எந்த வெடி பொருட்களும் கிடைக்கவில்லை. இதனால் கோவை மத்திய சிறையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து ஜெயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயில் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்து, மத்திய சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை அவர் தொடர்பு கொண்டு பேசிய செல்போன் எண்ணை வைத்து தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News