உள்ளூர் செய்திகள்
பல்லக்கில் அமர்ந்துள்ள தருமபுர ஆதீன சுவாமிகள்

தருமபுரம் ஆதீனத்தின் பட்டணப்பிரவேச நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது

Update: 2022-05-22 22:57 GMT
பட்டணப்பிரவேசத்திற்காக தருமபுரம் ஆதீன மடம் மின் விளக்குகளால், வாழைமரம் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
குத்தாலம்:

மயிலாடுதுறையில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் குருஞானசம்பந்தர் குருபூஜை விழாவின் போது ஆதீன திருமடத்தின் 4 வீதிகளில் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.

இந்நிலையில், விழாவின் முக்கியமான பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி நேற்று இரவு 10 மணியளவில் தொடங்கியது. தொடர்ந்து, விடியற்காலை 4 மணி வரை நடந்த நிகழ்ச்சியில்  தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமியை சுமார் 70 பேர் சிவிகை பல்லக்கில் தூக்கிச் சென்றனர்.
 
அப்போது ஆதீனத்தைச் சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டின் முன்பு வண்ணக் கோலமிட்டு ஆதீனகர்த்தருக்கு பூரண கும்ப மரியாதைடன் தீபாராதனை காட்டி வழிபட்டனர். அப்போது ஆதீனகர்த்தர் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். 

அதன்பின், ஆதீன மடத்திற்கு சென்றபிறகு சிறப்பு அலங்காரத்தில் குருமகா சன்னிதானம் கொலுக்காட்சியில் அமர்ந்து அருளாசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இந்து அமைப்பினர் மற்றும் பக்தர்கள் அதிக அளவில் கலந்துகொண்டனர். முன்னதாக, அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Tags:    

Similar News