உள்ளூர் செய்திகள்
ப.சிதம்பரம்

பிசாசுக்கும் ஆழ்கடலுக்கும் இடையே இருப்பதுபோல் மாநிலங்களின் நிலை- ப.சிதம்பரம் கருத்து

Published On 2022-05-22 08:59 GMT   |   Update On 2022-05-22 08:59 GMT
மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிக நிதியை வழங்காத வரை அல்லது அதிக மானியங்களை வழங்காத வரை, அந்த வருவாயை விட்டுக்கொடுக்க முடியுமா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுடெல்லி:

பெட்ரோல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. பெட்ரோல்  மீதான வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மாநில அரசுகளும் வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசு கூறி உள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. 

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறுகையில், எரிபொருளின் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்த பிறகு, மாநிலங்களின் நிலைமை பிசாசுக்கும் ஆழ்கடலுக்கும் இடையே இருப்பது போன்று உள்ளது என்றார்.

இது தொடர்பாக அவர் தனது அடுத்தடுத்த டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கலால் வரி என்ற வார்த்தையை நிதி மந்திரி பயன்படுத்தி உள்ளார். ஆனால் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படாத கூடுதல் கலால் வரியில் இருந்துதான் இந்த வரி குறைப்பு. 

எனவே, நேற்று நான் கூறியதற்கு மாறாக, வரிக் குறைப்பின் முழுச் சுமையும் மத்திய அரசு மீதுதான் விழுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளின் மூலம் மாநிலங்கள் மிகக் குறைவாகவே பெறுகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி மூலமாக மட்டுமே வருவாய் வருகிறது. 

மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிக நிதியை வழங்காத வரை அல்லது அதிக மானியங்களை வழங்காத வரை, அந்த வருவாயை விட்டுக்கொடுக்க முடியுமா? என்பது ஆச்சரியம். பிசாசுக்கும் ஆழ்கடலுக்கும் இடையே சிக்கித் தவிப்பது போல் நிலைமை உள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News