உள்ளூர் செய்திகள்
கி.வீரமணி

கர்நாடக பாட நூல்களில் பெரியார், நாராயண குரு, பகத்சிங் பாடங்கள் நீக்கம்- கி.வீரமணி கண்டனம்

Published On 2022-05-22 04:43 GMT   |   Update On 2022-05-22 04:48 GMT
விஞ்ஞான மனப்பான்மையையும், சமூக சீர்திருத்த உணர்வையும் மக்கள் மத்தியில் வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது.

சென்னை:

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கர்நாடக மாநிலத்தில் பாட நூல்களில் தந்தை பெரியார், நாராயண குரு, பகத்சிங் ஆகிய சமூகப் புரட்சியாளர்கள், சீர்திருத்தவாதிகள் பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டு இருப்பது கண்டனத்திற்குரியது.

சமூக சீர்திருத்தவாதிகள் நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோர் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்த பிறகு தான் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள்மீது இதுவரை உரிய நடவடிக்கை இல்லை.

விஞ்ஞான மனப்பான்மையையும், சமூக சீர்திருத்த உணர்வையும் மக்கள் மத்தியில் வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. (51ஏ(எச்)). ஆனால், ஒன்றிய பி.ஜே.பி. அரசோ மதவாதத்தையும், மூடநம்பிக்கைகளையும் வளர்க்கும் போக்கில் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த போக்கு எல்லா திசைகளில் இருந்தும் தலைவர்களால் கண்டிக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.

கர்நாடக மாநில அரசு பாடத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட தலைவர்கள் பற்றிய பாடங்களைப் பாடத் திட்டத்தில் இடம்பெறச் செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இல்லையெனில், மதச்சார்பின்மைக் கொள்கை, சமூக சீர்திருத்த உணர்வுகளில் நம்பிக்கையுள்ள அனைவரையும் ஒன்று திரட்டி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News