உள்ளூர் செய்திகள்
கொடுங்கையூர் குப்பை கிடங்கு

கொடுங்கையூர் குப்பை கிடங்கு தீ அதிகாலையில் முற்றிலும் அணைக்கப்பட்டது

Update: 2022-05-21 08:52 GMT
குப்பை கிடங்கை ஒட்டிய பகுதியான எழில்நகர், கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி பகுதிகளில் புகை மூட்டமாக காணப்பட்டது.
சென்னை:

சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் மாநகரப்பகுதிகளில் சேகரிப்படும் குப்பைகள் தரம் பிரித்து கொட்டப்படுகின்றன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் அமைந்துள்ள இந்த குப்பை கிடங்கில் நேற்று பகல் 12 மணியளவில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

குப்பை கிடங்கில் பின் பகுதியில் தீ எரிந்ததால் பெரிதாக தெரியவில்லை. ஆனால் அதன் புகை மெல்லமெல்ல பரவியது. அடுத்த சில மணி நேரத்தில் சுற்றுப்பகுதி முழுவதும் புகை மூட்டம் போல் காட்சியளித்தது.

இதுபற்றி உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர், கொருக்குப்பேட்டை, மாதவரம், பெரம்பூர் செபியம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 15 வாகனங்கள் குப்பை கிடங்கிற்கு சென்று தீ பிடித்து எரிந்த பகுதியில் தண்ணீரை அடித்து தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

தீப்பிடித்து புகை மண்டலமாக காட்சியளித்த அந்த பகுதியை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஆர்.டி.சேகர், மண்டல தலைவர் நேதாஜி கணேசன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

குப்பை கிடங்கில் இருந்து புகை வெளியேறாமல் தடுக்க தீயணைப்பு வண்டிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட ட்ரிப் தண்ணீர் கொண்டு வரப்பட்டு அணைக்கப்பட்டது.

ஆனாலும் குப்பை கிடங்கை ஒட்டிய பகுதியான எழில்நகர், கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி பகுதிகளில் புகை மூட்டமாக காணப்பட்டது.

தொடர்ந்து தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் குப்பை கிடங்கில் இருந்து வெளியேறிய புகை படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டது.

ஆனாலும் தொடர்ந்து அந்த பகுதியில் இருந்து இரவு புகை வந்து கொண்டே இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் அங்கேயே முகாமிட்டு புகையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அதிகாலை 2 மணிக்கு புகை முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டதாக பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.டி.சேகர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

குப்பை கிடங்கின் பின்பகுதியில் தீப்பிடித்ததால் பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. உடனடியாக தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டன.

தற்போது கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் குப்பை கிடங்கு பகுதியில் ஒரு தீயணைப்பு வண்டி தயார் நிலையில் நிறுத்தி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோடை காலம் முடியும் வரை அந்த வண்டி அங்கு நிறுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News