உள்ளூர் செய்திகள்
தேர்வு எழுதியவர்கள்

தமிழகம் முழுவதும் இன்று குரூப்-2 தேர்வை 11.78 லட்சம் பேர் எழுதினார்கள்

Update: 2022-05-21 07:01 GMT
இன்று நடைபெற்ற முதல் நிலை தேர்வு முடிவுகளை வருகிற ஜூன் மாத இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் மாதம் முதன்மை தேர்வை நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் குரூப்-2 முதல்நிலைத் தேர்வு இன்று நடந்தது. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உள்ளிட்ட 116 நேர்முகத் தேர்வு கொண்ட காலி பணியிடங்களுக்கும், நகராட்சி கமிஷனர், தலைமை செயலக உதவி பிரிவு அலுவலர் உள்பட 5,413 நேர்முகத் தேர்வு இல்லாத காலி பணியிடங்களுக்கும் தேர்வு நடந்தது.

குரூப்-2 தேர்வை தமிழகம் முழுவதும் 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் எழுதினார்கள். இவர்களில் 4 லட்சத்து 96 ஆயிரத்து 247 பேர் ஆண்கள், 6 லட்சத்து 81 ஆயிரத்து 880 பேர் பெண்கள். 48 பேர் மூன்றாம் பாலினத்தவர். இவர்களில் 14 ஆயிரத்து 531 மாற்றுத்திறனாளிகளும் தேர்வு எழுதினார்கள்.

இரு கைகளும் பாதிக்கப்பட்டவர்கள், பார்வையற்றோருக்காக 1,800 பேர் தேர்வு எழுத உதவினார்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1½ லட்சம் பேர் அதிகமாக தேர்வு எழுதினார்கள்.

தமிழகத்தில் 38 மாவட் டங்களில் அமைக்கப்பட்டிருந்த 117 மையங்களில் தேர்வு நடைபெற்றது. 4,012 முதன்மை கண்காணிப்பாளர்களும், 58,900 கண்காணிப்பாளர்களும் தேர்வை கண்காணித்தனர். சோதனை செய்யும் பணியில் 6,400 பேர் ஈடுபட்டனர்.

சென்னையில் தேர்வு எழுதுபவர்களுக்காக அதிகபட்சமாக 7 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு 1 லட்சத்து 15 ஆயிரத்து 843 பேர் தேர்வு எழுதினார்கள். குறைந்தபட்சமாக நீலகிரியில் 3 மையங்களில் 5,624 பேர் தேர்வு எழுதினார்கள்.

குரூப்-2 தேர்வு காலை 9.30 மணிக்கே தொடங்கியதால் தேர்வு எழுதியவர்கள் காலை 8.30 மணிக்கே தேர்வு மையங்களுக்கு சென்று விட்டனர். ஹால்டிக்கெட் மற்றும் அடையாள அட்டைகளை சரி பார்த்த பிறகு அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். 9 மணிக்கு பிறகு வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததால் அதற்கு முன்பே அனைவரும் தேர்வு மையங்களுக்கு வந்தனர்.

காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது.

தேர்வு எழுத வந்தவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுதியவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர்.

கருப்பு பால் பாயிண்ட் பேனாவை பயன்படுத்தினார்கள். செல்போன்கள், பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய நவீன கைக்கடிகாரங்கள், நவீன மோதிரம் மற்ற மின்னணு கருவிகள், மின்னணு அல்லாத பதிவுக் கருவிகள், புத்தகங்கள், பென்சில் புத்தகங்கள், தனித்தாள்கள், பொது குறிப்பு தாள்கள் போன்றவற்றை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இன்று நடைபெற்ற முதல் நிலை தேர்வு முடிவுகளை வருகிற ஜூன் மாத இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் மாதம் முதன்மை தேர்வை நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.

முதல் நிலை தேர்வில் வெற்றி பெறுவோரில் இருந்து ஒரு பதவியிடத்துக்கு 10 பேர் வீதம் முதன்மை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

Tags:    

Similar News