உள்ளூர் செய்திகள்
தக்காளி

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் தக்காளி விலை ரூ.100-ஐ நெருங்கியது

Update: 2022-05-21 06:24 GMT
நெல்லை மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாது தென்காசி மாவட்டத்தில் இருந்தும் தக்காளி, கத்திரிக்காய் அதிக அளவு விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர்.

நெல்லை டவுன் நயினார்குளத்தில் உள்ள மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு நெல்லை மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாது தென்காசி மாவட்டத்தில் இருந்தும் தக்காளி, கத்திரிக்காய் அதிக அளவு விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

அங்கிருந்து டவுன் போஸ் மார்க்கெட், பாளை காந்தி மார்க்கெட் உள்ளிட்ட மார்க்கெட்டுகளுக்கும், ஏராளமான சில்லறை விற்பனை கடைகளுக்கும் வியாபாரிகள் காய்கறிகளை வாங்கி செல்வார்கள். கடந்த சில நாட்களாக பாவூர்சத்திரம், ஆலங்குளம், மானூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நாட்டு தக்காளி வரத்து வெகுவாக குறைந்து விட்டது.

இதன் காரணமாக திண்டுக்கல், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஐபிரிட் தக்காளிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. வழக்கமாக ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தக்காளி நெல்லைக்கு இறக்குமதி செய்யப்படும்.

ஆனால் அங்கும் கடுமையான மழை காரணமாக தக்காளி விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டு விட்டது. இதனால் தக்காளி வரத்து இல்லை. தொடர்ந்து இறக்குமதி குறைந்து விட்டதால் தக்காளி விலை ரூ.100-ஐ நெருங்கி உள்ளது.

கடந்த மாதத்தில் தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக தக்காளி விலை ஏறுமுகமாகவே உள்ளது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் ரூ.50 வரை ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று மொத்த மார்க்கெட்டில் ரூ.85 முதல் ரூ.95 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 30 கிலோ எடை கொண்ட ஒரு தக்காளி பெட்டி ரூ.2,200-க்கு திண்டுக்கல் மற்றும் ஓசூர் பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

அவற்றை சில்லறை வியாபாரிகள் கடைகளுக்கு எடுத்து சென்று விற்பனை செய்யும்போது ரூ.100-ஐ நெருங்கி விடுகிறது. இதனால் அன்றாட சமையலில் முக்கிய தேவைகளில் ஒன்றான தக்காளியை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

பெரும்பாலான குடும்ப பெண்கள் சமையலுக்கு தக்காளி வாங்குவதை விடுத்து புளி கரைசலை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அரசு தக்காளி விலையை கட்டுப்படுத்துவதற்காக பசுமை பண்ணை அங்காடிகளில் தக்காளியை விற்பனை செய்வதற்கு முடிவு செய்து உள்ளது.

விரைவில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அங்காடிகளில் தக்காளியை விற்பனை செய்தால் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதே போல் மாவட்டத்தில் கத்தரிக்காய் ரூ.45-க்கு விற்பனையாகிறது. 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை கத்தரிக்காய் ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. கேரட் ஒருகிலோ ரூ.20 முதல் 30 வரை விற்பனையாகிறது. ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரட் இறக்குமதி செய்யப்படுகிறது.

தற்போது அங்கு மழை பெய்து வருவதால் கேரட்கள் மழையில் நனைந்தபடி கொண்டுவரப்படுகிறது. இதனால் அவற்றின் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News