உள்ளூர் செய்திகள்
தக்காளி

நாகர்கோவில் மார்க்கெட்டுகளில் தக்காளி விலை கிலோ ரூ.90 ஆக அதிகரிப்பு

Update: 2022-05-21 06:15 GMT
கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் வரத்து குறைந்ததை அடுத்து விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு தடியங்காய், வெள்ளரிக்காய், புடலங்காய், மிளகாய் போன்ற காய்கறிகள் பல்வேறு இடங்களில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

பீன்ஸ், தக்காளி, கேரட், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் ஓசூர், பெங்களூரு, மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

ஆனால் கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் வரத்து குறைந்ததை அடுத்து விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளி, பீன்ஸ் போன்றவற்றின் விலை கணிசமான அளவு உயர்ந்து உள்ளது.

நாகர்கோவில் அப்டா மார்க்கெட் மற்றும் கனக மூலம் சந்தைக்கு வரக்கூடிய தக்காளிகள் குறைவான அளவே வந்ததையடுத்து தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்து உள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் தக்காளி கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்டது. ஆனால் இன்று இரு மடங்கு உயர்ந்து ரூ.90-க்கு விற்பனையாகி வருகிறது.

இதே போல பீன்ஸ் கிலோ ரூ.100-க்கு விற்பனை ஆனது. சின்ன வெங்காயம் மற்றும் பல்லாரி ஆகியவற்றின் விலை குறைவாகவே உள்ளது. 4 கிலோ சின்ன வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இதே போல பல்லாரியும் 4 கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. உருளைக்கிழங்கு-ரூ.35,மிளகாய்-ரூ.40, கத்தரிக்காய்-ரூ.30, தடியங்காய்-ரூ.20, வெள்ளரிக்காய்-ரூ.30, புடலங்காய்-ரூ.30க்கு விற்பனையானது.

இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், “காய்கறிகளின் வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து காய்கறிகளை கொண்டு வருவதற்கு வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

இதனால் காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் விலையும் உயர்ந்து உள்ளது. தற்போது திருமண சீசன் அதிகமாக உள்ளதால் தேவை அதிகமாக உள்ளது. தேவைக்கேற்ப காய்கறிகள் கிடைப்பதில்லை. இனிவரும் நாட்களிலும் காய்கறிகளின் விலை உயர வாய்ப்புள்ளது” என்றார்.
Tags:    

Similar News