உள்ளூர் செய்திகள்
வழக்கு பதிவு

அரசின் விதிகளை மீறி ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்த தம்பதி மீது வழக்கு

Published On 2022-05-19 05:32 GMT   |   Update On 2022-05-19 05:32 GMT
அரசின் விதிகளை பின்பற்றாமல் ஆண் குழந்தையை சட்டம் விரோதமாக வளர்த்து வந்த பரமசிவன், செல்வி ஆகியோர் மீது ராஜபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்திற்கு கடந்த 17-ம் தேதி தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியில் ஒரு தம்பதியினர் சட்டவிரோதமாக குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து பாதுகாப்பு நல அலுவலர் முனியசாமி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது ராஜபாளையம் அருகே உள்ள வடக்கு மலையடிப்பட்டி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த பரமசிவன் என்ற பரமன், அவரது மனைவி செல்வி ஆகியோர் 10 மாத ஆண் குழந்தையை சட்டவிரோதமாக தத்தெடுத்து வளர்த்து வந்தது தெரியவந்தது.

10 மாதங்களுக்கு முன்பு ஒரு நபர் பிறந்த ஏழு நாட்கள் ஆன குழந்தையை தங்களிடம் கொடுத்துவிட்டு சென்றதாகவும், அவர் குறித்த விவரங்கள் தெரியாது எனவும் தம்பதியினர் தெரிவித்தனர். மேலும் குழந்தைக்கு கோபி ராஜ் என பெயரிட்டு தம்பதியினர் வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த தம்பதிகளிடமிருந்து 10 மாத குழந்தை மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அரசின் விதிகளை பின்பற்றாமல் ஆண் குழந்தையை சட்டம் விரோதமாக வளர்த்து வந்த பரமசிவன், செல்வி ஆகியோர் மீது ராஜபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோர்ட்டு உத்தரவின்படி கணவன், மனைவி மீது ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News