உள்ளூர் செய்திகள்
புதுப்பேட்டையில் போலீசாருக்கான பல்பொருள் அங்காடியை டிஜிபி சைலேந்திரபாபு திறந்து வைத்தார்

போலீசாரின் புத்துணர்வு பயிற்சிக்கு ரூ.10 கோடியில் புதிய திட்டம்- டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேச்சு

Update: 2022-05-17 10:10 GMT
போலீசாருக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் ரூ.10 கோடி செலவில் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
சென்னை:

எழும்பூர் புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் பல்பொருள் அங்காடியில் முதல் மாடியில் புதிதாக சுய சேவை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த அங்காடி சுயசேவை பிரிவை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசியதாவது:

காவலர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த புதிய அங்காடி போலீஸ் குடும்பத்துக்கு பயன் உள்ளதாக இருக்கும். காவலர்களின் வாரிசுகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து வருகிறோம். காவலர்கள் பலர் மன அழுத்தத்துடனேயே பணிபுரிந்து வருகிறார்கள். ஆண்டுக்கு 250 பேர் முதல் 300 பேர் வரை உயிரிழக்கிறார்கள். இவர்களில் தற்போது ரம்மி விளையாட்டு போன்றவற்றில் காவலர்கள் ஈடுபடுகிறார்கள். இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு பணத்தை இழக்க வேண்டாம்.

காவல் பணி ஆபத்தான பணியாகும். பணி நேரத்தில் தாக்குதல் சம்பவங்களும் நடைபெறுகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில் தற்போது வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசாருக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் ரூ. 10 கோடி செலவில் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பணியின்போது நடந்து கொள்வது எப்படி? என்பது பற்றியும் மனம் மகிழ்வுடன் இருக்கும் வகையிலும் ஒரு லட்சத்து 13 ஆயிரம் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசினார்.

Tags:    

Similar News