உள்ளூர் செய்திகள்
ஆகாய நடை மேம்பாலம்

தி.நகரில் ஆகாய நடை மேம்பாலம் கட்டுமான பணிகள் தீவிரம்

Published On 2022-05-17 07:12 GMT   |   Update On 2022-05-17 07:12 GMT
சென்னை தி.நகரில் கட்டப்பட்டு வரும் நவீன ஆகாய நடை மேம்பால பணிகள் இன்னும் ஓரிரு மாதத்தில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.
சென்னை:

தி.நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக ஆகாய நடை மேம்பாலம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இந்த நடைமேம்பாலம் திறக்கப்பட உள்ளது.

சென்னை தி.நகரில் “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் மாம்பலம் ரெயில் நிலையம் தியாகராய நகர் பேருந்து நிலையம் ஆகியவற்றை இணைத்து போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும் பொதுமக்கள் எளிதாக நடந்து செல்லும் வகையிலும் ஆகாய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதனால் தி.நகரில் பல ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். நகரும் படிக்கட்டு வசதிகளுடன் கூடிய ஆகாயநடை மேம்பாலம் (ஸ்கைவாக்) அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இதையொட்டி மாம்பலம் ரெயில் நிலையத்தில் கூடுதலாக ரெயில்வே நடை மேம்பாலத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு, ரெயில்வே பார்டர் சாலை மற்றும் மேட்லி சாலை வழியாக தியாகராயநகர் பேருந்து நிலையம் வரை 600 மீட்டர் நீளத்தில், 4 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.

தியாகராய நகர் பேருந்து நிலையம் மற்றும் அதன் எதிர்புறம், மாம்பலம் ரெயில் நிலையம் ஆகிய இடங்களின் வழியாக இந்த ஆகாய நடை மேம்பாலத்தை பொதுமக்கள் சென்று அடையலாம். தி.நகரில் கட்டப்பட்டு வரும் இந்த நவீன ஆகாய நடை மேம்பால பணிகள் இன்னும் ஓரிரு மாதத்தில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது. அப்போது தி.நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். பயணிகள், பொதுமக்கள் எளிதாக தி.நகருக்கு சென்று விரைவாக திரும்பலாம்.
Tags:    

Similar News