உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பல்லடம் வட்டார பகுதிகளில் கோடை மழையால் தக்காளி செடிகள் பாதிப்பு விவசாயிகள் கவலை

Published On 2022-05-17 07:03 GMT   |   Update On 2022-05-17 07:03 GMT
14 கிலோ எடை கொண்ட ஒரு டிப்பர் ரூ.70க்கு விற்ற நிலை போய் தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.70 ஆக விலை உயர்ந்துள்ளது.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பல்லடம், பொங்கலூர் வட்டாரத்தில் பெய்த கோடை மழை காரணமாக விவசாயிகள் பயிரிட்டு இருந்த தக்காளி செடிகள் சேதமடைந் துள்ளன. 

அதனால் சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. இது குறித்து விவசாயி ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது, பல்லடம் பகுதியில் தொடர்ந்து கோடை மழை பெய்ததால் தக்காளி செடிகள் பாதிப்படைந்து வருகின்றன. கடந்த மாதம் தக்காளி வரத்து அதிகரிப்பால் 1 கிலோ ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனால், அறுவடைக் கூலி கட்டுபடி ஆகாமல் விவசாயிகள் தக்காளியை செடியிலேயே விட்டுவிட்டோம். அடுத்த அறுவடை செய்ய முற்படும்போது கோடை மழை பெய்து தக்காளி பறிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் ஏற்பட்ட விலை வீழ்ச்சி அனுபவத்தால் விவசாயிகள் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்ய ஆர்வம் காட்டவில்லை.

இந்த நிலையில் தற்போது கோடை மழையால் தக்காளி செடிகள் பாதிப்படைந்து சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த மாதம் 14 கிலோ எடை கொண்ட ஒரு டிப்பர் ரூ.70க்கு விற்ற நிலை போய் தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.70 ஆக விலை உயர்ந்துள்ளது. 

அதே சமயம் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ ரூ.40க்கு தான் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். 1 ஏக்கர் தக்காளி சாகுபடி செய்ய ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. ஏக்கருக்கு 400 கிலோ மகசூல் கிடைக்கும். 

1 கிலோ ரூ.40க்கு விற்றால் தான் விவசாயிக்கு விலை கட்டுபடியாகும். தக்காளிக்கு உரிய விலை கிடைக்கும் நிலையில், கையிருப்பில் தக்காளி இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News