உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

செங்கோட்டை - நெல்லை காலை நேர பயணிகள் ரெயிலை உடனடியாக இயக்க வேண்டும்- பயணிகள் கோரிக்கை

Update: 2022-05-16 10:03 GMT
செங்கோட்டை - நெல்லை காலை நேர பயணிகள் ரெயிலை உடனடியாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீ.கே. புதூர்:

கொரோனா ஊரடங்குக்கு முன்பு செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு,  காலை 6.50, 10.15 மணி மதியம் 2.40, மாலை 5.50 ஆகிய நேரங்களிலும்,  நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு காலை 7 மணி, 9.20 மணி, மதியம் 1.50, மாலை 6.25 மணி ஆகிய நேரங்களிலும் நான்கு ஜோடி பயணிகள் ரெயில்கள் இயங்கி வந்தன.

 தற்போது நெல்லையில் இருந்து காலை 7 மணிக்கும், செங்கோட்டையில் இருந்து மாலை 5.50 மணிக்கும் ஒரு ரெயில் மட்டும் இயங்கி வருகிறது.

 இதில் பயணிகளிடம் அதிக வரவேற்பை பெற்ற ரெயில்கள் காலை 6.50 மணிக்கு செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு புறப்படும் ரெயிலும், நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு மாலை 6.25 மணிக்கு புறப்படும் ரெயிலும் ஆகும்.

 இந்த இரு ரெயில்களிலும் ஆட்கள்  நிற்கக்கூட இடம் இல்லாத அளவுக்கு பயணிகள் கூட்டம் படியில் தொங்கி கொண்டு செல்லும்.

 இதில் தென்காசி, அம்பை வழித்தடத்தில் உள்ள ஆயிரக்கணக்கானோர் காலையில் செங்கோட்டை யில் இருந்து புறப்படும் பயணிகள் ரெயிலை பயன்படுத்தி நெல்லையில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவ வசதிக்காக செல்வோர் என பல்வேறு காரணங்களால் தினசரி பயணிப்போர் ஏராளம்.காலையில் செங்கோட்டையில் இருந்து புறப்படும் இந்த  ரெயிலானது தென்காசி, அம்பை வழித்தட மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்து வந்தது.

 இதுகுறித்து பயணிகள்   கூறுகையில்:-

காலையில்  செங்கோட்டையில் புறப்படும்  பயணிகள் ரெயில் எப்போதும் பொதுமக்கள் கூட்டங்களால் நிரம்பி வழியும். தென்காசி மக்கள் முழுக்க முழுக்க நம்பி இருப்பது இந்த காலை ரெயிலை தான்.  

 மத்திய, மாநில அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், பள்ளி  கல்லூரி மாணவர்கள், நெல்லை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்வோர், ரெயில்வே ஊழியர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் நம்பி இருப்பது இந்த ரெயிலை தான்.

காலையில் இந்த ரெயிலில் நெல்லைக்கு சென்றுவிட்டு மாலையில் 6.25 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு வீடு திரும்புவது வழக்கம்.

 தற்போது தென்காசி- நெல்லை நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருவதால்  இந்த வழித்தடத்தில் சாலை மார்க்கமாக நெல்லைக்கு செல்வது மிகவும் கடினம் என்பதாலும், ரெயிலில் பயண கட்டணம் குறைவு என்பதாலும் இந்த வழித்தட மக்கள் பெரும்பாலும் இந்த செங்கோட்டை நெல்லை ரெயிலையே நம்பி உள்ளனர்.

எனவே இந்த ரெயிலை, பொது மக்கள்  நலன்  கருதி உடனடியாக இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News