உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

மின்சாரம் தாக்கி ஓட்டல் மேலாளர் சாவு

Update: 2022-05-16 09:20 GMT
தஞ்சை அருகே மின்சாரம் தாக்கி ஓட்டல் மேலாளல் பலியானார்.
வல்லம்:
தஞ்சையை அடுத்த களிமேடு பகுதியை சேர்ந்தவர் சிவபாலன் (வயது 37). இவர், சென்னையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். 

இந்த நிலையில் சிவபாலன் தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் உள்ள திருக்கானூர்பட்டியில் இடம் வாங்கி அங்கு புதிதாக வீடு கட்டினார். அந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நேற்று நடப்பதாக இருந்தது. 

நேற்று முன்தினம் திருக்கானூர்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நேற்று அதிகாலை வீட்டின் முன்பு போடப்பட்டிருந்த நாற்காலிகள் மழையில் நனைந்திருந்தது. இதனை பார்த்த சிவபாலன் அவற்றை அப்புறப்படுத்தி கொண்டு இருந்தார். 

அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த மின்வயரில் சிவபாலனின் கை பட்டதால் அவரை மின்சாரம் தாக்கியது.  அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே இருந்து அவரது மனைவி லலிதா வெளியே ஓடிவந்து மின்வயரை பிடித்தவாறு கிடந்த சிவபாலனை இழுத்தார். 

பின்னர் மயங்கி கிடந்த சிவபாலனை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டதால் லலிதா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு குடிபோகும் நாளில் நடந்த இந்த துயர சம்பவத்தால் கிரகப்பிரவேசத்திற்காக வந்திருந்த உறவினர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். 
Tags:    

Similar News